டெல்லி,பிப்.12; இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போவது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தான் என்று கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த போரில் இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் மக்களின் தரவுகள் (Data) தான் என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
AI புரட்சியும் இந்தியாவின் நிலையும்
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நேற்று (பிப்ரவரி,11) பேசிய ராகுல் காந்தி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒரு இயந்திரத்துடன் ஒப்பிட்டார். “எல்லோரும் AI பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் தரவுகளைப் பற்றிப் பேசாமல் AI பற்றிப் பேசுவது, பெட்ரோலைப் பற்றிப் பேசாமல் உள் எரிப்பு இயந்திரத்தைப் (Internal Combustion Engine) பற்றிப் பேசுவதற்கு சமம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 140 கோடி மக்களின் செயல்பாடுகள் மூலம் உருவாகும் தரவுகள் தான் இந்த தொழில்நுட்பப் புரட்சியின் எரிபொருள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மோடி அரசுக்கு கண்டனம்; “தரவுகளைத் தாரை வார்த்துவிட்டனர்”
மத்திய பட்ஜெட்டில் AI தொடர்பான அறிவிப்புகள் இந்தியாவின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்தார். குறிப்பாக, இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்தியர்களின் தரவுகளைத் தாரை வார்த்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
“நமது தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறை பெரும் அபாயத்தில் உள்ளது – நாம் வரும் புயலுக்குத் தயாராகவில்லை என்றால், ஆயிரக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்” என்று ராகுல் காந்தி எச்சரித்தார்.
தரவு இறையாண்மை (Data Sovereignty)
வெளிநாட்டு நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் அமேசான் போன்றவை ஏற்கனவே இந்தியர்களின் தரவுகளில் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ராகுல், புதிய ஒப்பந்தங்கள் மூலம் இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிலேயே பாதுகாப்பாகச் சேமிப்பதிலும், அவற்றின் அல்காரிதம்களில் (Algorithms) வெளிப்படைத்தன்மையைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்தியா தனது தரவுகளை மற்ற நாடுகளுடன் சமமான நிலையில் இருந்தே பேரம் பேச வேண்டும் என்றும், அடிபணிந்து போகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா ஒரு தரவு காலனித்துவத்திற்கு ஆளாகிறதா எனச் சந்தேகம்
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, தொழில்நுட்ப உலகில் இந்தியா ஒரு ‘தரவு காலனித்துவத்திற்கு’ (Data Colonialism) உள்ளாகிறதோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் உண்மையான பலமான அதன் மக்களைப் பயன்படுத்தி, சொந்த விதிமுறைகளின் அடிப்படையில் AI எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கருத்தின் மையப்பொருளாக உள்ளது.
