டெல்லி,ஜன.15; விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் கைகளுக்குச் சென்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று (15.01.2026) விசாரணைக்கு வருகிறது.
ஜனநாயகன் சர்ச்சையின் பின்னணி என்ன?
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. படத்திற்கு ‘U/A 16+’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்தின் (CBFC) ஆய்வுக்குழு பரிந்துரைத்தது. ஆனால், தணிக்கை வாரியத் தலைவர் தலையிட்டு, படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு (Reviewing Committee) அனுப்ப உத்தரவிட்டார். இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.
நீதிமன்றப் போராட்டம்
தனி நீதிபதி பி.டி. ஆஷா, தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இருப்பினும், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததையடுத்து, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.
உச்ச நீதிமன்றத்தில் இன்றைய விசாரணை
சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்கக் கோரி படத்தைத் தயாரித்த கே.வி.என் (KVN Productions) நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜனவரி 15) விசாரிக்கிறது.
தணிக்கை வாரியத்தின் ‘கேவியட்’ மனு
இதற்கிடையில், தணிக்கை வாரியம் (CBFC) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய விசாரணை மிகவும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே பல கோடிகளைத் தாண்டிய நிலையில், இன்றைய தீர்ப்பு படத்தின் புதிய ரிலீஸ் தேதியைத் தீர்மானிக்கும்.
திரைப்பட சுதந்திரத்திற்கும் தணிக்கை விதிகளுக்கும் இடையிலான இந்த சட்டப் போராட்டம் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் தணிக்கைச் சான்றிதழ் வழங்க பச்சைக்கொடி காட்டுமா அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை நீட்டிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.
