Skip to content

ஜெயலலிதா தான் என் முன்மாதிரி! அரசியலில் ‘கிங் மேக்கர்’ அல்ல ‘கிங்- ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விஜய் அதிரடி!

சென்னை,ஜன.31; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பரப்புரை, பொதுக்கூட்டம் என அரசியல் கட்சிகள் முழுவீச்சில் களப்பணியாற்றி வருகின்றன.

இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்று சென்னையில் அரசியல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அந்த செய்தி தொலைக்காட்சி சார்பில் விஜய்யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால்,வீட்டிற்கு நேரில் வந்து பேட்டி எடுக்கும்படி விஜய் கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த தனியார் நிறுவன செய்தியாளர்ககள் நேரில் சென்று விஜய்யிடம் பேட்டி கண்டனர்.

அரசியலில் உங்கள் முன் மாதிரி யார்? விஜய் அளித்த பதில்…

அப்போது அவர், “அரசியலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே எனது மிகப்பெரிய ரோல் மாடல்கள் என்று விஜய் தெரிவித்தார். துணிச்சலான முடிவுகளை எடுப்பதிலும், நிர்வாகத் திறனிலும் ஜெயலலிதா அவர்களின் ஆளுமை தன்னை ஈர்த்துள்ளதாக விஜய் உறுதிபடக் கூறினார்.

கிங் மேக்கர் அல்ல.. கிங் தான்!

அரசியலில் ஒரு புதிய கட்சியாகத் தடம் பதிக்கும்போது, தவெக மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது ‘கிங் மேக்கராக’ இருக்க விருப்பமா என்ற கேள்விக்கு விஜய் மிகவும் தெளிவாகப் பதிலளித்துள்ளார். “நான் ஏன் கிங் மேக்கராக இருக்க வேண்டும்? தேர்தலில் நான் வெற்றி பெறுவேன். அரசியலில் நான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை,” என்று கூறியதன் மூலம், தான் நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சினிமா டூ அரசியல்: விஜய்யின் மனமாற்றம்

பல ஆண்டுகளாகத் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்துவரும் விஜய் அரசியலுக்கு வந்த அனுபவம் குறித்த கேள்விக்கு, “சினிமா நட்சத்திரமாக இருப்பதிலிருந்து அரசியல்வாதியாக மாறுவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இது மிகவும் கடினமான மாற்றமாக இருந்தது. ஆனால் தற்போது எனது மனநிலையை அரசியலுக்காக முழுமையாகத் தயார்படுத்திவிட்டேன்,” என்று தெரிவித்தார்.

சவால்களும் எதிர்பார்ப்புகளும்

தனது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விஜய் வருத்தம் தெரிவித்தார். அரசியலுக்கு வரும்போது இதுபோன்ற தடைகள் வரும் என்பதைத் தான் எதிர்பார்த்ததாகவும், எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கரூர் கூட்டத்தில் நடந்த நெரிசல் சம்பவம் தன்னை இன்னும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘கிங் மேக்கர்’ அல்ல ‘கிங்’ என்பது வெற்றியைத் தருமா?

விஜய்யின் இந்த கருத்துக்கள், அவர் வரவிருக்கும் தேர்தலை எவ்வளவு தீவிரமாக அணுகுகிறார் என்பதைக் காட்டுகிறது. ஜெயலலிதாவைத் தனது முன்னுதாரணமாகக் கொள்வதும், ‘கிங் மேக்கர்’ இடத்திற்கு ஆசைப்படாமல் நேரடியாக வெற்றியை நோக்கிப் பயணிப்பதும் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கு வித்திடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *