புளோரிடா,டிச.30; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான சமீபத்திய சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-ஏ-லாகோ இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
டிரம்ப்-நெதன்யாகு சந்திப்பின் முக்கிய நோக்கம்
இந்தச் சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் “நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டார். குறிப்பாக, காசா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்வது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
ஹமாஸ் அமைப்பிற்கு டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை
காசாவில் அமைதி திரும்ப வேண்டுமானால் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். “அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஹமாஸ் ஆயுதங்களை அகற்றுவதற்கு மிகக் குறுகிய கால அவகாசமே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரான் மற்றும் பிராந்திய பாதுகாப்பு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தி குறித்து இஸ்ரேல் கொண்டுள்ள அச்சத்தை டிரம்ப் ஒப்புக்கொண்டார். ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சித்தால், அமெரிக்கா தலையிட்டு அந்த கட்டமைப்புகளை அழிக்கும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும், சிரியாவின் புதிய அரசுடன் இஸ்ரேல் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இஸ்ரேலின் உயரிய விருது டிரம்ப்பிற்கு அறிவிப்பு
இந்தச் சந்திப்பின் சிறப்பம்சமாக, இஸ்ரேல் நாட்டு குடிமகன் அல்லாத ஒருவருக்கு முதல்முறையாக வழங்கப்படும் “இஸ்ரேல் பரிசு’ அதிபர் டிரம்ப்பிற்கு வழங்கப்படும் என்று நெதன்யாகு அறிவித்தார். இஸ்ரேல் மீது டிரம்ப் கொண்டுள்ள அசைக்க முடியாத ஆதரவிற்காக இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையிலான இந்த சந்திப்பு, மத்திய கிழக்கு அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காசா போர் நிறுத்தம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த டிரம்பின் அதிரடி அணுகுமுறை, வரும் நாட்களில் அங்கு அமைதி ஏற்படுமா என்பதை தீர்மானிக்கும் காரணியாக அமையும்.
