வாஷிங்டன், டிச.13; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியப் பொருட்களின் மீது விதித்த 50 சதவீத வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மூன்று உறுப்பினர்கள் நேற்று (12.12.2025) புதிய தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வரியானது “சட்டவிரோதமானது” என்றும், இது அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இந்தியா உடனான இருதரப்பு உறவுகளைச் சீர்குலைக்கும் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தியா மீதான வரி விதிப்புக்கு எதிராக மசோதா
இந்தத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான டெபோரா ரோஸ் (Deborah Ross), மார்க் வீஸி (Marc Veasey) மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (Raja Krishnamoorthi) ஆகியோர் முன்னின்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ், டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்கள் மீது ஏற்கெனவே இருந்த வரிகளுடன் சேர்த்து, ஆகஸ்ட் 27, 2025 அன்று கூடுதலாக 25 சதவீத “இரண்டாம் நிலை” வரிகளை விதித்தது. இதனால் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது. இந்த அவசர நிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே இத்தீர்மானத்தின் முக்கிய நோக்கம். பிரேசில் போன்ற நாடுகளின் மீதான வரிகளை முடிவுக்குக் கொண்டுவர செனட் சபையில் கொண்டுவரப்பட்ட இருகட்சி நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்
வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் பேசுகையில், “வட கரோலினாவின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் இங்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன,” என்று சுட்டிக்காட்டினார்.
மற்றொரு உறுப்பினரான மார்க் வீஸி, “இந்தியா ஒரு முக்கியமான பண்பாடு மற்றும் பொருளாதாரக் கூட்டாளி. இந்தச் சட்டவிரோத வரிகள் ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவிக்கும் அமெரிக்க மக்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் சுமையாகும்” என்று கவலை தெரிவித்தார்.
விநியோகச் சங்கிலியில் தாக்கம்
இதுகுறித்துப் பேசிய இந்திய வம்சாவளி எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி, “இந்த வரிகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இவை விநியோகச் சங்கிலியைச் சீர்குலைப்பதோடு, அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதித்து, நுகர்வோருக்கான விலையை உயர்த்துகின்றன,” என்று எச்சரித்தார். மேலும், இந்த வரிகளை ரத்து செய்வது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பின்னணியில் இருப்பது ரஷ்ய எண்ணெய் விவகாரம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு உதவும் வகையில் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் டிரம்ப் இந்த வரி உயர்வைக் கொண்டு வந்தார். ஆகஸ்ட் 1ஆம் தேதி 25 சதவீத வரியையும், சில நாட்களுக்குப்
பிறகு மேலும் 25 சதவீத வரியையும் விதித்து, மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், வர்த்தக விவகாரங்களில் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அரசியல் சாசன அதிகாரத்தை மீட்டெடுக்கவும், அதிபர் தனது அவசர அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
