அலிகார், பிப்.25; டி20 உலகக் கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னணி வீரர் ரிங்கு சிங் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அவர் சொந்த ஊர் திரும்பினார்.
ரிங்கு சிங்கின் தந்தைக்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு
கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய வட்டாரங்களின்படி, ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கல்லீரல் புற்றுநோயுடன் (4th Stage) போராடி வருவதாகவும், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (Ventilator) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இக்கட்டான நிலையில் தனது குடும்பத்துடன் இருப்பதற்காக ரிங்கு சிங் சென்னை முகாமிலிருந்து அவசரமாக தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாருக்கு திரும்பியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா?
நாளை (பிப்ரவரி 26, வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்காவிடம் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா இந்தப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். நேற்று (பிப்ரவரி 24, செவ்வாய் கிழமை) நடைபெற்ற பயிற்சியில் ரிங்கு சிங் பங்கேற்கவில்லை. அவரது தந்தையின் உடல்நிலையைப் பொறுத்தே அவர் மீண்டும் அணியில் இணைவாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்திய அணியில் ஏற்படப்போகும் மாற்றங்கள்
ரிங்கு சிங் இல்லாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், கடந்த போட்டியில் நீக்கப்பட்ட அக்சர் மீண்டும் அணிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் சூர்யகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்ளனர்.
ரிங்கு சிங்கின் தந்தை நலம்பெற வேண்டி சமூகவலைதளங்களில் பதிவு
ரிங்கு சிங்கின் தந்தையின் உடல்நிலை விரைவில் சீராக வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். களத்தில் சிறந்த ஃபினிஷராகவும், அபாரமான ஃபீல்டராகவும் விளங்கும் ரிங்குவின் இல்லாமை இந்திய அணிக்கு ஒரு சவாலாகும். எனினும், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
