கொழும்பு,பிப்.16; டி20 உலகக்கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம்
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று (15.02.2026)நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இஷான் கிஷன் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சைத் துவம்சம் செய்த அவர், வெறும் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்காரை உயர்த்தினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
சரிந்த பாகிஸ்தானின் பேட்டிங் வரிசை
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 13 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. உஸ்மான் கான் (44 ரன்கள்) ஓரளவு நின்று விளையாடினாலும், இந்தியப் பந்துவீச்சாளர்களின் தாக்குதலை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்
இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அக்சர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
சர்ச்சைகளும் சுவாரஸ்யங்களும்
போட்டிக்கு முன்னதாகப் பாகிஸ்தான் அணி இப்போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்து, பின்னர் முடிவை மாற்றிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், டாஸ் போடும்போது இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளாதது ரசிகர்களிடையே விவாதத்தை உண்டாக்கியது. இருப்பினும், மைதானத்தில் இந்திய ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
குரூப் A பிரிவில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் இந்திய அணி
இந்த வெற்றியின் மூலம் நடப்புச் சாம்பியனான இந்தியா, குரூப்-A பிரிவில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, மிகுந்த நம்பிக்கையுடன் அடுத்த சுற்றுக்குத் தயாராகி வருகிறது. மறுபுறம், பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தனது அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
