Skip to content

டி20 உலகக்கோப்பை; ஹாரி புரூக் அதிரடி சதம்! பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

கண்டி,பிப்.25; டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் அபார சதம் அந்த அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றது.

பாகிஸ்தானின் நிதானமான பேட்டிங்

கண்டியில் உள்ள பல்லகெலே மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 24,2026)நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும், தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் மற்றும் ஃபகார் சமான் தலா 25 ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஷதாப் கான் அதிரடியாக 23 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் லியாம் டாசன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஹாரி புரூக்கின் வரலாற்றுச் சாதனை

165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷாகீன் அப்ரிடியின் வேகத்தில் ஃபில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியபோது, கேப்டன் ஹாரி புரூக் (Harry Brook)நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைத்து நின்று விளையாடினார்.

பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த புரூக், வெறும் 50 பந்துகளில் தனது கன்னி டி20 சர்வதேச சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆடவர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார். அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

கடைசி நேர பரபரப்பு

வெற்றிக்கு மிக அருகில் வந்தபோது புரூக் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும், வில் ஜாக்ஸ் (28 ரன்கள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் நிதானமான ஆட்டத்தால், இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அந்த அணியால் வெற்றியைப் பெற முடியவில்லை.

முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு தற்போது மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே அமையும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹாரி புரூக்கின் இந்த இன்னிங்ஸ் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *