Skip to content

டி20 உலகக் கோப்பை; எப்போது? எங்கே? நேரடி ஒளிபரப்பை எங்கு பார்ப்பது? முழு விவரம்!

டெல்லி,பிப்.06; கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை (07.02.2026) கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த மெகா தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நாளை தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் குறித்த முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.

டி20 உலகக் கோப்பை; முக்கிய தேதிகள் மற்றும் மைதானங்கள்

ஒரு மாத காலத்திற்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து படைக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

தொடக்க நாளில் (சனிக்கிழமை,7) நடப்பு சாம்பியனான இந்தியா, அமெரிக்காவை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

போட்டிகள் நடைபெறும் முக்கிய மைதானங்கள்:

இந்தியா: அகமதாபாத் (நரேந்திர மோடி மைதானம்), மும்பை (வான்கடே), சென்னை (சேப்பாக்கம்), டெல்லி (அருண் ஜெட்லி மைதானம்) மற்றும் கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்).

இலங்கை: கொழும்பு (ஆர்.பிரேமதாசா மற்றும் எஸ்.எஸ்.சி மைதானங்கள்) மற்றும் கண்டி (பல்லேகலே).

மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்தியா vs பாகிஸ்தான்: போட்டி நடக்குமா?

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மோதலான இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி இலங்கையின் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் தான் பங்கேற்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பையை நேரலையில் எங்கு பார்ப்பது?

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டிகளைத் தொலைக்காட்சியிலும் டிஜிட்டல் தளங்களிலும் கண்டு ரசிக்கலாம்:

தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

டிஜிட்டல் தளம்: ஜியோ ஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலிகளில் நேரலையில் பார்க்கலாம்.

மொழிகள்: தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும்
ஆங்கிலம் என 5 முக்கிய மொழிகளில் வர்ணனை கிடைக்கும்.

டி20 உலகக்கோப்பை-சிறப்பு அம்சங்கள்

இந்த முறை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ‘மல்டி-காம்’ (Multi-cam) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் ஸ்டம்ப் கேமரா, ஃபீல்டிங் வியூ எனப் பல்வேறு கோணங்களில் போட்டியை ரசிக்க முடியும். மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள PVR – Inox திரையரங்குகளில் சில முக்கியமான போட்டிகள் பெரிய திரையில் திரையிடப்பட உள்ளன.

ஒரு மாதத்திற்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து!

இந்தியா தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் அதே வேளையில், சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடர் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் காலண்டரில் தேதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள், உற்சாகமான கிரிக்கெட் போருக்குத் தயாராகுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *