டெல்லி,பிப்.13; டி20 உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. டெல்லியில் நேற்று (12.02.2026) நடைபெற்ற இந்தப் போட்டியில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய வீரர்கள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தினர்.
இஷான் கிஷனின் ருத்ரதாண்டவம்: 24 பந்துகளில் 61 ரன்கள்
டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபிஷேக்கிற்குப் பதிலாக தொடக்க வீரராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் இஷான் கிஷன் சிக்ஸர் மழையைப் பொழிந்தார். வெறும் 24 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளமிட்டார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 மெகா சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி 100 ரன்களை வெறும் 7 ஓவர்களிலேயே கடந்து உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.
ஹர்திக் பாண்ட்யா – சிவம் துபே அதிரடி கூட்டணி
நடுவரிசையில் சூர்யகுமார் (12) மற்றும் திலக் (25) விரைந்து வெளியேறினாலும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சிவம் தூபே ஜோடி அணியை மீட்டெடுத்தது. ஹர்திக் பாண்ட்யா தனது வழக்கமான அதிரடியில் 28 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். சிவம் தூபே 23 ரன்கள் பங்களித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. நமீபியா தரப்பில் கேப்டன் எராஸ்மஸ் மிகச் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வருண் சக்ரவர்த்தியின் சுழல் ஜாலம்
210 ரன்கள் என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய நமீபியா அணிக்கு தொடக்கம் ஓரளவு சாதகமாக அமைந்தது. பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய அந்த அணி, ஒரு கட்டத்தில் 7 ஓவர்களில் 67 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. ஆனால், ‘மிஸ்டரி ஸ்பின்னர்’ வருண் சக்ரவர்த்தி வந்த பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. அவர் வெறும் 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்
வருண் சக்ரவர்த்தியைத் தொடர்ந்து அக்ஷர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை எடுத்து நமீபியா அணியை நிலைகுலையச் செய்தனர். இறுதியில் நமீபியா அணி 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
52 ரன்கள், 2 விக்கெட்டுகள்; ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன்
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பேட்டிங்கில் 52 ரன்களும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா ‘ஆட்டநாயகன்’ விருதை வென்றார். பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான பெரும் போட்டிக்கு முன்னதாக, இந்த வெற்றி இந்திய அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
