Skip to content

டி20 உலகக் கோப்பை வெற்றி; சமூக வலைதள விமர்சனங்களுக்கு கௌதம் கம்பீர் அதிரடி பதில்!

அகமதாபாத், மார்ச்.09; டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமூக வலைதளங்கள் குறித்து ஒரு அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை

அகமதாபாத்தில் நேற்று (மார்ச் 8, ஞாயிறு) நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கௌதம் கம்பீர், “சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை- டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் அந்த 30 பேருக்கு மட்டுமே நான் கடமைப்பட்டவன்” என்று மிகத் தெளிவாகக் கூறினார்.

தனிநபர் சாதனைகளை விட கோப்பைகளே முக்கியம்

கௌதம் கம்பீர் எப்போதும் அணியின் வெற்றிக்கே முன்னுரிமை கொடுப்பவர்; அதையே இப்போதும் வலியுறுத்தியுள்ளார். “எனது தத்துவம் மிகவும் எளிமையானது; தனிப்பட்ட மைல்கற்கள் (Milestones) முக்கியமல்ல, கோப்பைகளே முக்கியம்; இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலமாக நாம் தனிநபர் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம்; நான் பயிற்சியாளராக இருக்கும் வரை, மைல்கற்களைப் பற்றிப் பேசுவதை விட வெற்றியைப் பற்றிப் பேசுவதையே விரும்புவேன்” என்று அவர் கூறினார்.

சூர்யகுமாருக்கு கவுதம் கம்பீர் பாராட்டு

கேப்டன் சூர்யகுமார் உடனான தனது பிணைப்பு குறித்துப் பேசிய கம்பீர், “சூர்யா ஒரு சிறந்த தலைவர்; அவர் தன்னை ஒரு ‘கேப்டன்’ என்று அழைப்பதை விட ‘தலைவர்’ (Leader) என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறார்; ஒரு அணியின் டிரஸ்ஸிங் ரூமில் கேப்டனை விட தலைவர் என்பது மிகப்பெரிய பொறுப்பு; நானும் சூர்யாவும் ஒரே மாதிரியான சிந்தனையைக் கொண்டிருப்பது எனது அதிர்ஷ்டம்” என்று பாராட்டியுள்ளார்.

விமர்சனங்களைக் கடந்து வெற்றிக்காக உழைப்பதால் உயர்ந்து நிற்கும் கம்பீர்!

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி மற்றும் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்ட முதல் அணி என பல சாதனைகளைப் படைத்துள்ளது. கௌதம் கம்பீரின் இந்த நேர்மையான மற்றும் வெளிப்படையான கருத்துகள், இந்திய அணியின் புதிய அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. சமூக வலைதள விமர்சனங்களைக் கடந்து அணியின் வெற்றிக்காக மட்டுமே உழைக்கும் அவரது உறுதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *