டெல்லி, ஜன.07; டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க துர்க்மான் கேட் பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதியை ஒட்டியுள்ள பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம் (MCD) மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பெரும் பதற்றம் நிலவியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே மோதல் ஏற்பட்டது.
நள்ளிரவில் திரண்ட புல்டோசர்கள், பொக்லைன் இயந்திரங்கள்
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் வகையில், இன்று (07.01.2026) அதிகாலை சுமார் 1 மணி அளவில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான காவலர்கள் துர்க்மான் கேட் பகுதிக்கு வந்தனர். 17-க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்பு என கருதப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. சுமார் 38,940 சதுர அடி பரப்பளவிலான ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.
கல்வீச்சு மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
இடிப்பு நடவடிக்கை தொடங்கியவுடன் அப்பகுதி மக்கள் மற்றும் கடைக்காரர்கள் பெரும் திரளாக கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் சிலர் காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் ஐந்து காவலர்கள் காயமடைந்தனர். கூட்டத்தைக் கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தியது. தற்போது அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை
முன்னதாக, நவம்பர் 12, 2025 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மசூதி கமிட்டி மற்றும் வக்ஃப் வாரியம் சார்பில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலங்களை ஆக்கிரமிப்பு என நீதிமன்றம் கருதியது.
இயல்பு நிலைக்குத் திரும்பும் துர்க்மான் கேட் பகுதி
அதே நேரத்தில், மசூதி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் வசித்தவர்களுக்கு பாதிப்பு
துர்க்மான் கேட் பகுதியில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பி வருகிறது.
இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் இடையிலான இந்த மோதல் டெல்லியில் மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
