Skip to content

டெல்லியில் ஹோலி பண்டிகை மோதலில் 26 வயது இளைஞர் கொலை; குடும்பத்தை காக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்து வந்தவர் பலியான சோகம்!

டெல்லி,மார்ச்.07; டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட மோதலில், 26 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருப்பார் என்று நம்பப்பட்ட அந்த இளைஞர், ஒரு சிறிய பலூன் தகராறில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி வீசிய தண்ணீர் பலூன்: விபரீதமான விளையாட்டு

கடந்த புதன்கிழமை அன்று உத்தம் நகரின் ஜே.ஜே. காலனி பகுதியில் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது தருண் குமார் என்ற இளைஞரின் உறவுக்காரச் சிறுமி (11 வயது ) மாடியில் இருந்து வீசிய தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன் ஒன்று, தவறுதலாக சாலையில் சென்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மீது பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தருணின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடக்கத்தில் இந்த விவகாரம் சமாதானமாக முடிந்ததாகக் கூறப்படுகிறது.

தருண் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்

சம்பவம் நடந்த போது தருண் வீட்டில் இல்லை. அவர் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் தருணை வழிமறித்து இரும்புத் தடிகள், கற்கள் மற்றும் ஹாக்கி மட்டைகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த தருண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடும்பத்தின் ஒரே நம்பிக்கை சிதைந்தது

உயிரிழந்த தருண் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) படித்து வந்தார். “அவன் எங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய நம்பிக்கை. படித்து முடித்துவிட்டு எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வேன் என்று அடிக்கடி கூறுவான்” என அவரது தந்தை மேம்ராஜ் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தருண், ஒரு நல்ல வேலைக்குச் சென்று தனது பெற்றோரைத் தாங்க வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்து வந்தவர்.

காவல்துறை நடவடிக்கை மற்றும் பதற்றம்

இந்தக் கொலை தொடர்பாக இதுவரை நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு சிறுவனைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வகுப்புவாத பதற்றம் ஏற்பட்டதால், துணை ராணுவப் படையினர் மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருணின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளைஞர் தருண்குமாரின் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது தந்தை மேம்ராஜ் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தருண் குமாரின் குடும்பத்தினரும், அவரைக் கொன்றவர்களின் குடும்பத்தினரும் அண்டை வீட்டார் தான் என்றும், இருதரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக பகை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இளைஞரின் உயிரைப் பறித்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு

சிறுபிள்ளைத்தனமான விளையாட்டில் தொடங்கிய ஒரு மோதல், ஒரு இளைஞனின் உயிரைப் பறித்து ஒரு குடும்பத்தின் கனவையே சிதைத்துள்ளது. சமூக ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் இத்தகைய விழா காலங்களில் மிகவும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *