Skip to content

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே கிடையாது; ராகுல் காந்தியிடம் அறுதியிட்டுச் சொன்ன கனிமொழி-கலகலக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

சென்னை,ஜன.31; தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காய்நகர்த்தல்களை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ‘ஆட்சியில் பங்கு’ குறித்த விவாதங்கள் டெல்லி வரை எதிரொலித்துள்ளன.

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சலா?

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18-ல் வெற்றி பெற்றது. ஆனால், வரும் தேர்தலில் காங்கிரஸின் எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பின்பற்றிய “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற தாரக மந்திரத்திற்கு மாறாக, தற்போது காங்கிரஸ் “ஆட்சியில் பங்கு” கேட்கத் தொடங்கியுள்ளது திமுக தலைமையைப் அதிருப்தியடையச் செய்துள்ளது.

ராகுல் காந்தி – கனிமொழி சந்திப்பு: நடந்தது என்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ராகுல் காந்தி சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கைகள்:

ஆட்சியில் பங்கு: வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம் அளிக்க வேண்டும்.

கூடுதல் தொகுதிகள்: 41 சட்டப்பேரவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.

மாநிலங்களவை உறுப்பினர் சீட்: 2 ராஜ்ய சபா இடங்கள் வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்: வரும் உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.

அதிர்ச்சியில் கனிமொழி: திமுக ஏற்க மறுப்பு

ராகுல் காந்தியின் இந்த அதிரடி நிபந்தனைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி எம்.பி, திமுக-வின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. “ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றும், தொகுதிகளைப் பொறுத்தவரை கடந்த முறையை விட கூடுதலாக 2 இடங்கள் (மொத்தம் 27) மட்டுமே தர முடியும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி நீடிக்குமா? புதிய கணக்குகள்!

இந்த இழுபறியால் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால், வேறு சில புதிய கட்சிகளை இணைத்து அந்த வாக்கு இழப்பைச் சரிசெய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கனிமொழி எம்.பி “திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்க நெருங்க மோதல் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான இந்த தொகுதிப் பங்கீடு மோதல் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸின் பிடிவாதமும், திமுக-வின் கறாரான பதிலடியும் தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *