Skip to content

டேராடூன் அதிர்ச்சி: திரிபுரா மாணவர் கொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்; பாஜக மீது சாடல்!

டேராடூன்,டிச.29; உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா (Anjel Chakma) அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான வெறுப்பு குற்றத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.
வெறுப்புணர்வை பாஜக இயல்பானதாக்குகிறது: ராகுல் காட்டம்

இந்தச் சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் ஆகியோருக்கு டேராடூனில் நடந்தது ஒரு பயங்கரமான வெறுப்பு குற்றம். வெறுப்பு என்பது ஒரே இரவில் உருவாவதில்லை. பல ஆண்டுகளாக நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துகள் மற்றும் பொறுப்பற்ற கதைகள் மூலம் இளைஞர்களிடையே இது விதைக்கப்படுகிறது. ஆளும் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளால் இது இன்று சமூகத்தில் ஒரு இயல்பான விஷயமாக மாற்றப்பட்டுள்ளது,” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

சக இந்தியர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் சமூகமாக மாறிவிடக்கூடாது

மேலும், இந்தியா என்பது மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாடு என்றும், சக இந்தியர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் ஒரு சமூகமாக நாம் மாறிவிடக்கூடாது என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

திரிபுரா இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன?

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, டேராடூனில் எம்பிஏ பயின்று வந்த அஞ்செல் சக்மா மற்றும் அவரது தம்பி மைக்கேல் ஆகியோர் மளிகைப் பொருட்கள் வாங்க சந்தைக்குச் சென்றுள்ளனர். அப்போது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து, அவர்களது தோற்றத்தை வைத்து இனவெறி ரீதியான வசவுகளை வீசியுள்ளது.

அவர்களை ‘சீனர்கள்’ என்று கிண்டல் செய்த கும்பலிடம், அஞ்செல் சக்மா மிகவும் நிதானமாக, “நாங்கள் சீனர்கள் அல்ல, இந்தியர்கள். அதை நிரூபிக்க நாங்கள் என்ன சான்றிதழ் காட்ட வேண்டும்?” என்று கேட்டுள்ளார். தனது தேசப்பற்றையும் அடையாளத்தையும் நிலைநாட்டிய அந்த நொடியே, அந்தக் கும்பல் கத்திகளுடன் அவர் மீது பாய்ந்துள்ளது.

முதலமைச்சர் நடவடிக்கை உறுதி

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாணவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தப்பியோடிய நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரைப் பிடிக்க வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் மீது இனவெறித் தாக்குதல்; நாடு எங்கே செல்கிறது?

கல்வி கற்கச் சென்ற இடத்தில் ஒரு மாணவர் இனவெறித் தாக்குதலால் உயிரிழந்திருப்பது தேசத்தின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். அரசியல் பாகுபாடுகளைக் கடந்து, மனிதநேயத்தையும் பன்முகத்தன்மையையும் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். ஏஞ்சல் சக்மாவின் மரணம் நீதிக்கான கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *