Skip to content

தஞ்சையில் போலீஸ் வாகனத்தை ‘ரிவர்ஸ்’ எடுத்ததால் விபத்தா? நடிகர் விஜய்யை காணச் சென்றவர் படுகாயம்; நடந்தது என்ன?

தஞ்சாவூர், மார்ச்.05; தஞ்சாவூரில் நேற்று (மார்ச் 4, புதன்கிழமை) தவெக தலைவர் விஜய்யை காணச் சென்ற இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் போலீஸ் வாகனம் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதற்கு காவல்துறை வாகனம் பின்னோக்கி நகர்ந்ததே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது.

விமானநிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து விஜய் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் விஜய் வருகையையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விமான நிலையத்திற்குள் தவெக கட்சியினரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும் விமான நிலையத்திற்கு வந்த செய்தியாளர்கள், பயணிகள் மற்றும் ஊழியர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தபோது விபத்து

இவ்வாறான சூழலில் திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் விஜய்யைக் காண ஆவலுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் ஆபத்தை உணராமல் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை பார்க்காமல் அதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

ஒரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

இதில் இளைஞர்கள் பலர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அதில் ஒரு கல்லூரி மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், காவல்துறை வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் பரவின.

போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்தா?

இது தொடர்பாக தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு சார்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஊர்வலத்தில் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் மோதியதாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்தியைப் பரப்பாதீர் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *