சென்னை,ஜன.06; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
கடந்த இரண்டு தசாப்தங்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பலன்களை வழங்கும் “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
‘உங்க கனவ சொல்லுங்க’என்ற திட்டத்திற்கும் ஒப்புதல்
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (06.01.2026) நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுமட்டுமின்றி,’உங்க கனவ சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்திற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களை நிறைவேற்ற என்ன செய்யலாம்?
இதில், நீங்கள் வசிக்கும் தெரு, உங்களின் ஊர் எப்படி இருக்க வேண்டும்?, எந்த மாதிரியான புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்?, தற்போதைய திட்டங்களை மேலும் செழுமையாக்க உங்களின் ஆலோசனைகள்?, மாவட்டத்தைப் பற்றிய கனவுகள் அயலகத் தமிழர்களின் கனவுகள உள்ளிட்டவைக் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி
அமைச்சரவைக் கூட்டத்தில், மேலும் 4 தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்ந்து ஆளுநர் உரையுடன் வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
