சென்னை,ஏப்.09; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச்) 30ஆம் தேதி தொடங்கி கடந்த 6ஆம் தேதி முடிவடைந்தது.
நான்கு விடுமுறை நாட்களை தவிர்த்து எஞ்சிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
234 தொகுதிகளில் 7,599 வேட்புமனுக்கள் தாக்கலாகின
முதல் நாளான மார்ச் 30ஆம் தேதி 573 மனுக்களும், 2ஆம் நாளான கடந்த 2ஆம் தேதி 1,361 மனுக்களும், 3ஆம் நாளான 4ஆம் தேதி 3,430 மனுக்களும், கடைசி நாளான 6ஆம் தேதி 7,599 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து வேட்புமனுக்களையும் கடந்த 7ஆம் தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
2,480 வேட்புமனுக்கள் தள்ளுபடி: தேர்தல் ஆணையம்
இதன் பின்னர் 5,081 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,480 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் 38 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தவெக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 233ஆனது
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர் மற்றும் அவருக்கு மாற்று வேட்பாளர் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 233 ஆக குறைந்துள்ளது.
இன்று வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசிநாளாகும். மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர் நேரில் வந்தோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவரின் மூலமாகவோ வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
அதன்படி இன்று (ஏப்ரல் 9, 2026) காலை 11 மணியிலிருந்து 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்து இன்று அறிவிக்கப்படுகிறது. இந்த வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய தாள் (Ballot Paper) அச்சிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தபால் வாக்குகள் அச்சிடும் பணி நாளை தொடக்கம்
அதன் அடிப்படையில் நாளை தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் தொடங்குகின்றன. அதற்கடுத்து பயிற்சிக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்கள் இடம்பெறுவர்.
வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் இயந்திரங்கள் சேர்க்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பொத்தான் இடம்பெறும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT இயந்திரங்கள் தயார்
ஏற்கெனவே, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளன.
இதற்கான பயிற்சியும் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல் பூத் ஸ்லிப் நாளைமுதல் வழங்கப்பட உள்ளது. ஏப்.17-ம் தேதிக்குள் முடிக்கவும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
23ஆம் தேதி தேர்தல்; வாக்களிக்க 5.73 கோடி பேர் தகுதி
வரும் ஏப்.23-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதற்காக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
