சென்னை,பிப்.11; தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது இலக்கைச் சுருக்கிக் கொண்டுள்ளது. சுமார் 20 சதவீத இடங்களுக்கு மேல் போட்டியிடப் போவதில்லை எனத் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
45 முதல் 50 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக!
சென்னையிலுள்ள பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக சுமார் 45 முதல் 50 இடங்களை மட்டுமே குறிவைக்க வாய்ப்புள்ளது. கடந்த 2021 தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை வென்ற நிலையில், இந்த முறை தனது பலத்தை விடக் கூட்டணியின் வெற்றிக்கே முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்துதல்
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஒற்றுமையை வலுப்படுத்துவதே இந்தத் தேர்தலின் முக்கிய நோக்கம் என்று பி.எல். சந்தோஷ் வலியுறுத்தினார். தொகுதிப் பங்கீட்டை விட, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே வெற்றியை உறுதி செய்ய முடியும் என்று அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொண்டர்களுக்கான தேர்தல் பணிகள்
தேர்தல் பணிகளில் தொண்டர்களின் பங்களிப்பு குறித்துத் தெளிவான இலக்குகளைத் தலைமை நிர்ணயித்துள்ளது:
வேட்பாளர்கள்: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் குறைந்தது 70 சதவீதப் பரப்புரைப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
மற்ற நிர்வாகிகள்: போட்டியிடாத நிர்வாகிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக 30 சதவீதப் பங்களிப்பை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு தொண்டரும் கூட்டணியின் வெற்றிக்காகத் தங்களுக்குத் தரப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கட்சியில் அதிரடி மாற்றங்கள்; கேசவ விநாயகம் விலகல்
அமைப்பு ரீதியாகவும் தமிழ்நாடு பாஜகவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் எதிர்ப்பைத் தொடர்ந்து, மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) பதவியிலிருந்து கேசவ விநாயகம் விலகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தேர்தல் முடியும் வரை இந்தப் பதவி காலியாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலை குறித்த மௌனம்
தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாகக் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் எனப் பி.எல். சந்தோஷ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்திலேயே, அதாவது முதல் கட்டத்திலேயே நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
பாஜகவிற்கு 40-50 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதா?
45 முதல் 50 இடங்களை குறிவைத்தால் போதுமானது என்று பாஜக கருதினாலும், அத்தனை தொகுதிகளை அதிமுக ஒதுக்குமா என்பதுதான் கேள்விக்குறி. ஏனென்றால், தனிப்பெரும்பான்மை பெறக்கூடிய அளவிலான தொகுதிகளில் களம் காண வேண்டும் என்பது அதிமுகவின் திட்டம். அதன்படி, 175 தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க 58 தொகுதிகள் தான் இருக்கும்?
இதனை மனதில் வைத்துதான் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக நிற்கும் தொகுதிகளைத் தவிர்த்து எஞ்சிய 58 இடங்களைத்தான் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முடியும். இதில் பாஜகவிற்கு 40 தொகுதிகளை ஒதுக்கிவிட்டால், பிற கட்சிகளுக்கு எப்படி அவர்கள் கேட்கும் இடங்களை வழங்க முடியும் என்று அதிமுக யோசிக்கின்றது.
மேலும் பாமக, அமமுக ஆகிய இரு கட்சிகளுக்கு சுமார் 30 தொகுதிகள் சென்றுவிட வாய்ப்புண்டு. தமாகா, ஐஜேகே, புரட்சி பாரதம் போன்ற சிறிய கட்சிகளுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும்.
குறைவான இடங்கள் என்ற உத்திக்கு வந்துவிட்டதா பாஜக?
தமிழ்நாடு அரசியலில் பாஜக இந்த முறை ‘குறைவான இடங்கள் – அதிக வெற்றி’ என்ற உத்தியைக் கையாளுவது போல் தெரிகிறது. அதிமுக உடனான கூட்டணியைச் சிதையாமல் பாதுகாத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக வலுவான போட்டியை வழங்க பாஜக தயாராகி வருகிறது. உட்கட்சிப் பூசல்களைத் தீர்த்து, கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
