Skip to content

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026; ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? அதிரடி கருத்துக்கணிப்பு முடிவுகள்!

சென்னை,மார்ச்.11; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் கடைசி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்களின் மனநிலை என்ன? எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பது குறித்த பரபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மெகா கருத்துக்கணிப்பு: 70 லட்சம் வாக்காளர்களிடம் ஆய்வு

ஐதராபாத்தைச் சேர்ந்த கே.கே சர்வே மற்றும் யுக்திகள் என்ற தனியார் நிறுவனத்தின் அங்கமான பாராவீல் (Parawheel) தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 30,000 வாக்காளர்கள் என, மாநிலம் முழுவதும் மொத்தம் 70 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

வாக்கு சதவீத நிலவரம்; முதலிடத்தில் திமுக கூட்டணி

தற்போதைய அரசியல் சூழலில் 4 முனைப் போட்டி நிலவினால், கட்சிகள் பெறும் வாக்கு சதவீதங்கள் பின்வருமாறு அமையும் என கணிக்கப்பட்டுள்ளது:

திமுக கூட்டணி: 41.5% வாக்குகள் (முதலிடம்)

அதிமுக கூட்டணி: 36.2% வாக்குகள் (இரண்டாம் இடம்)

தமிழக வெற்றிக் கழகம் (தவெக): 13.6% வாக்குகள் (மூன்றாம் இடம்)

நாம் தமிழர் கட்சி: 7.9% வாக்குகள் (நான்காம் இடம்)

தவெக-வின் எழுச்சியும் சென்னை நிலவரமும்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இந்த தேர்தலில் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள தொகுதிகளில் திமுக-வுக்கு அடுத்தபடியாக தவெக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் அக்கட்சிக்கு பலமான ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

கூட்டணி மாற்றங்கள் வெற்றியைத் தீர்மானிக்குமா?

தற்போதைய நிலவரப்படி திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிந்தாலும், ஒரு முக்கிய திருப்பம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தவெக இணையக்கூடும் என்ற பேச்சுகள் பரவலாக அடிபடுகின்றன. ஒருவேளை இந்த கூட்டணி அமையும் பட்சத்தில், தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாக மாறவும், இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பெரும் சவாலாக மாறியிருக்கும் 2026 தேர்தல் களம்

2026 தேர்தல் களம் முன்பை விட மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. நான்கு முனைப் போட்டி நிலவும் எனக் கணிக்கப்பட்டாலும், கடைசி நேரக் கூட்டணி மாற்றங்கள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும். எது எப்படியோ, இந்த முறை தமிழ்நாடு வாக்காளர்கள் ஒரு விறுவிறுப்பான மற்றும் மாற்றங்கள் நிறைந்த தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *