சென்னை,பிப்.17; தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 17) இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது போன்ற விவகாரங்களை எழுப்ப முயன்ற அதிமுகவினருக்கு, சபாநாயகர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் பட்ஜெட் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு ஈடுபட்டனர்.
தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்புகள்: இபிஎஸ்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த இடைக்கால பட்ஜெட் என்பது வெறும் காகிதப் பூ; தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்புகளின் தொகுப்பு” என்று கடுமையாக விமர்சித்தார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாகவே அவைக்கு வெளியே அதிமுகவினர் கறுப்புப் பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ததால் இன்று பேரவை வளாகமே பரபரப்பாகக் காணப்பட்டது.
“தமிழ்நாடு அரசின் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக இருக்கும்”
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசின் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவித்தார். 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன், திருத்த மதிப்பீடுகளில் 9,42,851 கோடி ரூபாயாக இருக்கும்.
2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிலுவைக் கடன் 10,62,248 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மதிப்பீடு.
போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு
இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத்துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு; மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு
கப்பல் கட்டுமானம், கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதனால், கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.
நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர் .
காலை உணவு திட்டத்தால் 19.34 லட்சம் மாணாக்கர் பயன்
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் பள்ளி வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்
மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம் வழங்குகிறது.
தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.
ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,686 கோடி ஒதுக்கீடு
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை
ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு. மருத்துவத் துறைக்கு ரூ.22090 கோடி ஒதுக்கீடு. தொழிலாளர் நலத் துறைக்கு 1996 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தொழில் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு.
காவிரி, நொய்யல், தாமிரபரணி மேம்பாட்டிற்கு ரூ.374 கோடி
காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்கா ஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு. சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
