Skip to content

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்; இன்னும் ஓரிரு வாரங்களில் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!

சென்னை,பிப்.28; தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோன்று புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய நான்கு மாநில அரசுகளின் பதவிக்காலமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து மேற்கண்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்

தமிழ்நாட்டில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. வடமாநிலங்களில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றது

தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதிதான் நடந்தது. கொரோனா காலம் என்பதால், அப்போது முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மே மாதம் தேர்தலா?

ஆனால், இம்முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு 3 நாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்தது.

புதுச்சேரியில் தேர்தல் ஏற்பாடு பணிகளை ஆய்வு நடத்திய பின்னர் சென்னைக்கு வருகை தந்தனர்.

உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையக்குழு

பின்னர் அவர்கள் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஒரே கட்டமாக தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தேர்தல் ஆணையக் குழு சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தது. அனைவரும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் தங்களது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *