சென்னை,மார்ச்.14; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, வளர்ந்து வரும் பாஜக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என பல முனைப் போட்டி நிலவும் சூழலில், லயோலா கல்லூரி (Loyola College) குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அடுத்த முதலமைச்சர் யார்? மக்களின் விருப்பம் என்ன?
சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக களம் காணும் நடிகர் விஜய் மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் அவருக்கு அதிக ஆதரவு இருப்பதாகக் கருதப்படுவதால், வரவிருக்கும் தேர்தலில் தவெக கணிசமான வாக்குகளை பெற வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 25 விழுக்காடு வரை விஜய் வாக்குகளைப் பெறக்கூடும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
முதலமைச்சர் வாய்ப்பு; ஸ்டாலின், விஜய் முதலிடம்
இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
அடுத்த முதலைமச்சராகும் வாய்ப்பு குறித்த கருத்துக் கணிப்பில் மு.க.ஸ்டாலின், விஜய் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர்.
இபிஎஸ் 2, அண்ணாமலை 3, சீமான் 4ஆம் இடத்தில்…
அவர்கள் தவிர எடப்பாடி பழனிசாமி 2ஆம் இடத்திலும், அண்ணாமலை 3ஆவது இடத்திலும், சீமான் 4ஆவது இடத்திலும், கனிமொழி 5ஆம் இடத்திலும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
50 தொகுதிகளில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு!
மேலும், 50 தொகுதிகளில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 80 தொகுதிகளில் தவெக இரண்டாவது இடம்பெற வாய்ப்புள்ளது. அதிமுக 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கிராமப்புறங்களில் தவெகவுக்கு அதிக வாக்கு எனக் கணிப்பு
கிராமப்புறங்களில் தவெகவுக்கு 19.20% வாக்குகளும், திமுகவுக்கு 17.7% வாக்குகளும், அதிமுகவுக்கு 15.32% வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 6% வாக்குகளும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் திமுகவுக்கு அதிக வாக்கு கிடைக்கும் எனத் தகவல்
இதேபோன்று நகர்ப்புறங்களில் திமுகவுக்கு 24.77% வாக்குகளும், தவெகவிற்கு 23.46% வாக்குகளும், அதிமுகவுக்கு 20.55% வாக்குகளும், நாதகவிற்கு 6.7% வாக்குகளும் கிடைக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
