சென்னை,ஜன.22; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் அரசியல் சூழலை ஆய்வு செய்யவும், தேர்தல் வியூகங்களை வகுக்கவும் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சரும் தமிழ்நாடு மாநில பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மாநில அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை
சென்னையில் முகாமிட்டிருக்கும் பியூஷ் கோயல், பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், காலை உணவு விருந்திலும் அவர் பங்கேற்றார்.
இந்தச் சந்திப்பின் போது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி பலப்படுத்துதல் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
திமுக ஆட்சியை வீழ்த்துவதே இலக்கு
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தனது நீண்டகால நண்பர் என்றும், அவரது தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டிற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணியில் இணைந்த புதிய கட்சிகள்
தமிழ்நாட்டில் மெகா கூட்டணியை உருவாக்கும் நோக்கில், டிடிவி தினகரனின் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. “நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்படுவோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் நலனே எங்களின் பிரதான இலக்கு” என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அதைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்றும் கூறினார்.
திருப்புமுனையாக அமையுமா 2026 சட்டப்பேரவைத் தேர்தல்?
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 2026 தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தங்களது தேர்தல் பணிகளை இப்போதே தீவிரப்படுத்தியுள்ளன. மதுராந்தகத்தில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளது, தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
