சென்னை,மார்ச்.12; மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவகங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் ஹோட்டல்களை மூடும் நிலை உருவாகியுள்ளது.
பெட்ரோல்,டீசலுக்கு தட்டுப்பாடு என பரவிய தகவல்
இதுபோன்ற சூழலில், சென்னையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனால் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை மையங்களில் நேற்றிரவு (மார்ச் 11, புதன்) இருசக்கர வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். ஒரே நேரத்தில் பெருமளவில் கூட்டம் திரண்டதால், பெட்ரோல் விற்பனை மையங்களில் பணிபுரிவோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சில பெட்ரோல் நிலையங்களில் இரவே விற்றுத்தீர்ந்த பெட்ரோல்!
இருசக்கர வாகனங்களில் வந்த பெரும்பாலானோர், 25 லிட்டர் கேன்களை கொண்டு வந்து பெட்ரோல் மற்றும் டீசலை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சில பெட்ரோல் நிலையங்களில் இரவே எரிபொருள் விற்றுத்தீர்ந்தது.
பெட்ரோல்,டீசல் இனி கிடைக்காது என்ற ரீதியில் தகவல் பரவியதால், அதிகாலையிலும் பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
பெட்ரோல் தட்டுப்பாடு என வதந்தி பரவியதால் பிரச்னை
இது பெரும் பிரச்னையாக உருவெடுத்ததால், பெட்ரோல் நிலைய பணியாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள பெட்ரோலிய வணிகர் சங்க மாநிலத் தலைவர் முரளி, மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட வதந்தி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அவர் கூறிய தகவல்கள்; நாடு முழுவதும் 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.
‘பெட்ரோல், டீசலை, கேன், பாட்டில்களில் வாங்காதீர்’
பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி.
கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம்; அது மிகவும் ஆபத்தானது.
எவ்வளவு கேட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் தருகின்றன.
7,000 பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோலுக்கு ‘நோ’ தட்டுப்பாடு!
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 7000 பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது. டீலர்களுக்கு கடன் கொடுப்பதை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
வதந்தியால் மக்கள் தேவைக்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வாங்கினால் விரைவில் காலியாகி செயற்கை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் முரளி தெரிவித்துள்ளார்.
