Skip to content

தமிழ்நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்வாரா? – மு.வீரபாண்டியன் எழுப்பும் அதிரடி வினாக்கள்!

சென்னை,ஜன.23; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு நலன் சார்ந்த பல்வேறு முக்கிய கேள்விகளை பிரதமரை நோக்கி முன்வைத்துள்ளார்.

தேர்தலுக்காக வரும் பிரதமருக்கு மக்கள் வரவேற்பு அளிப்பார்களா?

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் மு.வீரபாண்டியன்,
தேச விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, ராணுவம் அமைய வித்திட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை, தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு தேர்வு செய்திருப்பது ஏதேச்சையாக அமைந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்திருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மத்திய அரசு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.

நிதிப் பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா?

தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குச் செலுத்தும் ஒவ்வொரு ஒரு ரூபாய் வரியிலும் வெறும் 29 பைசா மட்டுமே மாநிலத்திற்குத் திரும்பக் கிடைக்கிறது – ஆனால், வட மாநிலங்களுக்கு ஒரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் வரை வழங்கப்படுவது ஏன்? என்ற பாரபட்சமான நிதிப் பகிர்வு குறித்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம், மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் அளிப்பதில் உள்ள தாமதங்கள் என்றும் மு.வீரபாண்டியன் வினவியிருக்கிறார்.

பேரிடர் நிவாரணம்: மிக்ஜாம் மற்றும் பெஞ்சல் புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மாநில அரசு கோரிய நிதியில் மிகச் சிறிய அளவே வழங்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

மொழி மற்றும் கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாடு

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைத் தகர்த்து, இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கில் தேசியக் கல்விக் கொள்கை (NEP) மற்றும் பிஎம்ஸ்ரீ (PM-SHRI) திட்டங்களை ஏற்கச் சொல்லி மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக வழங்கப்பட வேண்டிய ரூ. 2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்திருப்பதை வீரபாண்டியன் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளுக்கு மிகக் குறைந்த நிதியையே ஒதுக்குவதாக அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் ஆளுநர் விவகாரம்

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை’ முடக்கும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு ஊக்கமளிப்பதையும் வீரபாண்டியன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பாரதியையும், வள்ளுவரையும் மேற்கோள் காட்டினால் பேசினால் போதுமா?

“மேடைகளில் பாரதியாரையும், வள்ளுவரையும் மேற்கோள் காட்டி பேசுவது மட்டும் போதாது; தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்,” என்பதே வீரபாண்டியனின் கோரிக்கையாக உள்ளது. அரசியல் நேர்மை இருந்தால், மதுராந்தகம் கூட்டத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *