Skip to content

தவெகவிற்கு பொதுச்சின்னம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்! தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஒதுக்கீடு செய்யப்படலாம்!


சென்னை, ஜன.21; தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொதுச்சின்னம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி ஆகியவற்றில் தேர்தல் வியூகங்கள் வகுப்பது, தொகுதிப்பங்கீடு போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேர்தல் களத்திற்கு தீவிரமாக தயாராகும் அரசியல் கட்சிகள்

கடந்த தேர்தல்களைப் போலவே இம்முறையும் தனித்துப் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இதுபோன்ற சூழலில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தேர்தல் வியூகங்களை தீட்டி வருகிறார்.

தவெகவின் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று ஒருமுறைக்கு இருமுறை திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், அக்கட்சியுடன் பிரதான கட்சிகள் எதுவும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்துவிட்டது.

தேர்தலில் 4 முனை போட்டிக்கான வாய்ப்பு அதிகம்

எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

தேர்தலில், கட்சியை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்க பொதுச்சின்னம் அவசியம் என்பதை விஜய் நன்கு உணர்ந்துள்ளார். அதன்படி, ஆட்டோ ரிக் ஷா, கிரிக்கெட் மட்டை, விசில் உள்ளிட்ட பத்து சின்னங்களை குறிப்பிட்டு, அவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது.

பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் விஜய்

இதனிடையே, விஜய் சில நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார். அவரது ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள், சிபிஐ விசாரணை போன்றவை காரணமாக அரசியல் பயணத்தில் சவால்களையும் இடையூறுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

தவெகவிற்கு பொதுச்சின்னம் கிடைக்க வாய்ப்பு எனத் தகவல்

இதுபோன்ற நெருக்கடியான சூழலில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும், தேர்தல் ஆணைய விதிகளின்படி கட்சியின் கணக்குகளை சரியாக தாக்கல் செய்துள்ளதால், பொதுச் சின்னம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுச்சின்னம் கிடைத்தால் உத்வேகம் அளிக்கும் என நம்பிக்கை

அவ்வாறு பொதுச்சின்னம் கிடைக்கும் பட்சத்தில் தவெகவின் தேர்தல் தயாரிப்புப் பணிகளுக்கு அது உத்வேகம் அளிக்கும் என்று கட்சியினர் நம்புகின்றனர்.

வரும் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுச்சின்ணம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் கட்சியின் வெற்றி வாய்ப்பை பலப்படுத்தும் என்று விஜய்யும் தவெக தொண்டர்களும் நம்புவதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *