ஈரோட்டில் வரும் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் தவெக பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே பரப்புரை, பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு என கட்சிகளின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம்
அந்த வகையில், வரும் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் விஜயமங்கலம் அருகே உள்ள சரளைப் பகுதியில் பிரமாண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தை விஜய் நடத்த உள்ளார். இந்த கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வியபுரி அம்மன் கோவில் நிலமாகும். 31 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தில், சுமார் 20 ஏக்கரை பயன்படுத்துவதற்குத் தவெக அனுமதி கோரியிருந்தது.
5 நிபந்தனைகளை விதித்துள்ள இந்து சமய அறநிலையத் துறை
கோவில் நிலத்தைப் பயன்படுத்துவதற்கு அறநிலையத் துறை உதவி ஆணையர் சுகுமார் ஆய்வு செய்த பின், பின்வரும் 5 முக்கிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்ட்டுள்ளது. நிலத்தைப் பயன்படுத்துவதற்கு வாடகையாக ரூ.50,000 மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.50,000 என மொத்தம் ஒரு லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கட்சி நிர்வாகமே தங்களின் சொந்தச் செலவில் செய்ய வேண்டும்.
மேடை அமைப்பதற்கும், ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும் காவல்துறையிடம் தனியாக முறையான அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பிறகு, மைதானத்தில் சேரும் குப்பைகளை அகற்றி, அந்த இடத்தை பழையபடி தூய்மையாக ஒப்படைக்க வேண்டும். இதற்கான செலவையும் கட்சி நிர்வாகமே ஏற்க வேண்டும்.
தற்காலிகமாக நிகழ்ச்சி நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நிலத்தின் மீது எவ்வித உரிமையும் கொண்டாடக்கூடாது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்; காவல்துறை நடவடிக்கை
சுமார் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே காவல்துறை சார்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் மைதானம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தடுப்புகள் கொண்ட கேலரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கட்சி நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் ஆலோசனை
பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் குறித்துத் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கொங்கு மண்டலப் பொறுப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் இன்று (15.12.2025) கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்து சமய அறநிலையத் துறையின் நிபந்தனைகளைத் தமிழக வெற்றிக்கழகம் ஏற்றுக்கொண்டதையடுத்து, தற்போது காவல்துறையினர் முறைப்படி கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
