Skip to content

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்: திருச்சியில் பிரதமர் மோடி அதிரடி முழக்கம்!

திருச்சி,மார்ச்.11; தமிழ்நாட்டில் 17ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 11, புதன்) மாலை நடைபெற்றது.
இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசுவதாகவும் குறிப்பிட்டார்.

குடும்ப அரசியல் மற்றும் ஊழல் புகார்கள்

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியை “குடும்ப ஆட்சி” என்று விமர்சித்த பிரதமர், இது மக்கள் நலனுக்கான அரசு அல்ல, ஒரு குடும்பத்தின் சொத்தை பெருக்குவதற்கான அரசு என்று சாடினார். குறிப்பாக, “விஞ்ஞான ஊழலுக்குப் பெயர்போனது திமுக” என்று குறிப்பிட்ட அவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்த மோசடிப் பணம் எங்கே செல்கிறது? எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்களிப்பு

கடந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தை விட, தற்போதைய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு 4 மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
தமிழக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக ரூ.57,000 கோடி ஒதுக்கீடு.
திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களின் தரம் உயர்த்துதல்.
‘மதுரை மல்லி’ உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான கட்டமைப்பு வசதிகள்.

விவசாயம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு

காவிரிப் படுகை விவசாயிகள் தமிழ்நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வதாகவும், ஆனால் அவர்களின் கோரிக்கைகளை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் மோடி குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்குப் பயமில்லாத வாழ்க்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யும் என வாக்குறுதி அளித்தார்.

2026 தேர்தல்: ஊழலா? வளர்ச்சியா?

“ஆடியில் காவிரி பொங்குவது போல, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசுகிறது” என்று குறிப்பிட்ட பிரதமர், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கூறினார். ஊழல் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறோமா அல்லது வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய கிழக்கு போர் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

ஈரான்-அமெரிக்கா போர் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், எந்தவொரு உலகளாவிய நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு என்றும் பிரதமர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாடு ஒரு பெரும் மாற்றத்தை விரும்புகிறது என்பதும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே சாத்தியம் என்பதும் பிரதமரின் பேச்சில் வெளிப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *