Skip to content

திமுகவை ‘கை’ கழுவுகிறதா காங்கிரஸ்? உதறல் எடுத்துள்ள உதயசூரியன்! ஆளும் கூட்டணியை ஆட்டம் காண வைத்துள்ள நகர்வுகள்!

சென்னை,மார்ச்.03; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் அதேவேளையில், ஆளும் திமுக கூட்டணியில் நடைபெற்று வரும் தொகுதிப்பங்கீடு பேச்சுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த தேர்தல் அளவுக்கு சில கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாத அளவுக்கு சிக்கல் எழுந்துள்ளதால் திமுக தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

திமுக கறார்…பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை..?

குறிப்பாக, இயற்கை கூட்டாளி என்றழைக்கப்படும் காங்கிரஸ் கட்சி கேட்கும் அளவுக்கு தொகுதிகளை தர முடியாது என்று திமுக கூறி வருவதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

போதாக்குறைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், டெல்லியில் அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் 25 தொகுதிகளை ஏற்க முடியாது என்று வெடித்துச் சிதறினார். இது எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது.

வேணுகோபாலின் அவசர ஆலோசனை; அதகளமாகும் அரசியல் களம்

இதுபோதாதென்று கே.சி.வேணுகோபால் நடத்திய அவசர ஆலோசனை, பேச்சுவார்த்தை வரும்படி காங்கிரஸ் கட்சிக்கு திமுக விதித்துள்ள கெடு எனத் தமிழ்நாடு அரசியல் களம் அதகளப்படுகிறது.

அதிமுக தொகுதிப்பங்கீடு பேச்சு தொடர்பாக ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற நிலையில், தமிழ்நாட்டில் திமுக -காங்கிரஸ் கூட்டணியைச் சுற்றி உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

காங்கிரசின் கலகம்-கலக்கமடைந்த திராவிட முன்னேற்ற கழகம்

2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகளோடு, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் போர்க்கொடி உயர்த்தியதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

சோனியா காந்தியின் தலையீட்டிற்குப் பிறகே இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது. ஆயினும், அறிவாலயத்தில் நடந்த சமீபத்திய பேச்சுவார்த்தையில், “காங்கிரஸிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது” என திமுக கறாராகத் தெரிவித்துவிட்டது. இந்தத் தகவல் ராகுல் காந்தியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

பிறந்தநாள் வாழ்த்தில் ‘பிரதர்’ மிஸ்ஸிங்..! சமூகவலைதளங்களுக்கு தீனி

இந்தச் சூழலில்தான், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்திலும், அதற்கு ஸ்டாலின் அளித்த நன்றியிலும் ‘சகோதரர்’ என்கிற வார்த்தை இடம்பெறாதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது கூட்டணி உடையப்போவதற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாமே பாஜகவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கனுமா?

நிலைமை தீவிரமடைந்ததால், கே.சி. வேணுகோபால் மற்றும் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுடன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்கள். “திமுக 25 இடங்களைத்தான் தருகிறது, நாம் என்ன முடிவு எடுக்கலாம்?” எனக் கேட்டதற்கு, எம்.எல்.ஏ-க்கள் தரப்பில், “நாம் கூட்டணியை விட்டு வெளியேறினால், அது பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் காலூன்ற நாமே சிவப்புக் கம்பளம் விரிப்பது போலாகிவிடும்; நடிகர் விஜய்க்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது என்று பேசியதாகத் தெரிகிறது.

தவெகவுடன் ‘கை’ கோர்ப்பது சரியாக இருக்காது; காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

சொந்தக் கட்சிக்கே பரப்புரைக்கு வராத விஜய், புதுச்சேரி மற்றும் கேரளாவில் காங்கிரஸிற்காக வருவாரா என்பது சந்தேகம்தான்; எனவே, தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்ப்பது இப்போதைக்குச் சரியான முடிவாக இருக்காது. மு.க.ஸ்டாலினிடம் பேசி கூடுதல் இடங்களைப் பெற முயற்சிப்பதே அரசியல் ரீதியாகச் சரியான முடிவாக இருக்கும். எனினும், தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றத் தயார்” என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராகுலை சந்திக்க ஆதவ் அர்ஜுனா ஐதராபாத் பயணமா? திமுக அதிருப்தி

இதற்கிடையில், கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று (மார்ச் 2, செவ்வாய்க்கிழமை) ராகுல் காந்தி ஐதராபாத் வந்திருந்தார். இதையடுத்து, அவரை சந்திக்க தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சென்றதாக தகவல்கள் பரவின. இந்தத் தகவல்கள் அறிவாலயத்தை எட்டியதும், “மாநிலங்களவை சீட்டுக்கான வேட்பாளர் யார் என்பதை இன்றைக்குள் (மார்ச் 3-ம் தேதி) சொல்லிவிடுங்கள்” என ஏற்கெனவே கிரிஷ் சோடங்கரிடம் விதித்த ‘கெடு’வை திமுக தலைமை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

பேச வராவிடில், மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவிக்க திமுக முடிவு?

மேலும், இன்றைக்குள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிடுவோம் என்றும் காங்கிரஸ் தலைமைக்கு திமுக தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபோன்ற சூழலில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டு நிகழ்விற்காக கே.சி. வேணுகோபால் சென்னை வரவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *