சென்னை,ஜன.12; தமிழ்நாடு அரசியல் களம் தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (12.01.2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பதில்கள் தமிழ்நாடு அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.
தேர்தல் கூட்டணி; வதந்திகளும் உண்மைகளும்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் பலவிதமான யூகங்களும், பேச்சுகளும் எழுவது இயல்பு என்று கூறினார். “தேர்தல் நேரத்தில் உண்மையும் வரும், பொய்யும் வரும்; ஊடகங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கின்றன என்பதைப் பொறுத்தே செய்திகள் அமைகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது வரை பாஜக, திமுக அல்லது அதிமுக ஆகிய எந்தக் கட்சிகளும் கூட்டணி குறித்து தன்னிடம் அதிகாரப்பூர்வமாகப் பேசவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு அதிரடி பதில்
செய்தியாளர்கள் அவரிடம், “திமுக கூட்டணி குறித்து பரிசீலனையில் உள்ளதா?” என்று கேட்டபோது, எவ்வித தயக்கமும் இன்றி “ஆமாம்” என்று பதிலளித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறீர்களா அல்லது வெளியேறிவிட்டீர்களா? என்ற கேள்விக்கு, “இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. காலம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்,” என்று சூசகமாகத் தெரிவித்தார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்!
புதிய கூட்டணி அமைப்பதற்கான சூழல் நிலவுகிறதா என்ற கேள்விக்கு, செய்தியாளர்களை நோக்கியே, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று நகைச்சுவையாகக் கேட்ட அவர், “தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். எதையும் இப்போது உறுதிபடச் சொல்ல முடியாது,” என்று தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில தேர்தல்களாக பாஜக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், தற்போது திமுக ஆட்சி குறித்து பாசிட்டிவான கருத்துகளையும், கூட்டணி குறித்த பரிசீலனையையும் ராமதாஸ் வெளிப்படுத்தியிருப்பது மாற்றத்திற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசியலில் ‘நிழல் யுத்தம்’ முடிவுக்கு வந்து, கூட்டணி பலப்பரீட்சை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
