சென்னை,பிப்.25; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் முக்கியமாக, இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) ஆகிய இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து என்ன முடிவெடுக்கப் போகின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
இடதுசாரிகளின் பிடிவாதம்: ஏன் கூடுதல் இடங்கள்?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் இரண்டு கட்சிகளும் தலா 2 இடங்களில் மட்டுமே வென்றன. அதேசமயம் 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளுமே தாங்கள் போட்டியிட்ட தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதை முன்னிறுத்தி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தலா 10 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இது தொகுதிப் பங்கீட்டில் புதிய திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகையால் சிக்கல்
புதிய கட்சிகளின் வருகையாலும், கடந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றி சதவீதம் குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டியும், இந்த முறை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தலைமை நடத்திய மறைமுக பேச்சுவார்த்தையின் போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இம்முறை கள நிலவரம் மாறியுள்ளதாக இடதுசாரி தலைவர்கள் கருதுகின்றனர்.மக்கள் நலத் திட்டங்களுக்காகத் தாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் பலம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர்.
திமுகவின் வியூகம்: தொகுதிகள் குறைக்கப்படுமா?
மறுபுறம், திமுக தரப்பில் ஒரு சிக்கல் நிலவுகிறது. கூட்டணியில் புதிய கட்சிகள்இணைந்துள்ளதாலும், திமுக நேரடியாக அதிக இடங்களில் (சுமார் 160-170) போட்டியிட விரும்புவதாலும், கூட்டணிக் கட்சிகளுக்குக் கடந்த முறை கொடுத்த இடங்களைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
இடதுசாரிகள் விட்டுக்கொடுப்பார்களா?
“கொள்கை ரீதியாக நாங்கள் திமுகவுடன் பயணித்தாலும், கட்சி வளர்ச்சியைப் புறக்கணிக்க முடியாது” என்பதே இடதுசாரி தொண்டர்களின் குரலாக உள்ளது. ஒருவேளை திமுக தொகுதிகளைக் குறைக்க முயன்றால், இடதுசாரிகள் அதை ஏற்பார்களா அல்லது மாற்று வியூகம் அமைப்பார்களா என்பதுதான் தற்போதைய அரசியல் பரபரப்பாக உள்ளது.
தலா 6 இடங்களுக்கும் குறைவாக ஒதுக்கினால் ஏற்பார்களா?
குறிப்பாக, தலா 6 இடங்களுக்குக் குறைவாக ஒதுக்கினால் அது தங்கள் கட்சியின் கௌரவத்தைப் பாதிக்கும் என அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் அவர்கள் திமுகவுடன் இணக்கமாகப் போகவும் வாய்ப்புள்ளது.
தமிழக அரசியலில் இடதுசாரிகள் எப்போதும் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றனர். 2026 தேர்தலில் அவர்கள் கேட்கும் இடங்கள் கிடைக்குமா அல்லது ‘கறார்’ மனப்பான்மையுடன் திமுக தொகுதிகளைக் குறைக்குமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். எதுவாக இருந்தாலும், இந்தத் தொகுதிப் பங்கீடு 2026 தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
