சென்னை,மார்ச்.20; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
மெகா கூட்டணியும் திமுக-வின் புதிய வியூகமும்
கடந்த 2021 தேர்தலில் 13 கட்சிகளுடன் களம் கண்ட திமுக, இந்த முறை 26 கட்சிகளை உள்ளடக்கிய பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. அதிகப்படியான கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதே தற்போது இடப்பங்கீட்டில் சிக்கல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. புதிய கட்சிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், பழைய தோழமைக் கட்சிகளுக்கு வழங்கிய இடங்களைக் குறைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
அதிருப்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க.
கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்த முறை 5 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. அதேபோல், கூடுதல் இடங்களை எதிர்பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த முறையைப் போலவே 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த இரு கட்சிகளும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு
புதிதாகக் கூட்டணியில் இணைந்துள்ள கமலஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், அந்தக் கட்சியை திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடையே யோசனையை ஏற்படுத்தியுள்ளது.
தேமதிக-வை கூட்டணியில் சேர்த்ததால் ஏற்பட்ட சிக்கல்
கூட்டணியில் கடைசியாக இணைந்த தேமுதிக-வுக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் மற்ற கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “எங்களை விடக் குறைவான வாக்கு வங்கி கொண்ட கட்சிக்கு கூடுதல் இடங்களா?” என்ற கேள்வியை மற்ற தோழமைக் கட்சிகள் எழுப்பியுள்ளன. தேமுதிக அதிமுக பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே திமுக இந்த சலுகையை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
விடாக்கண்டன் கொடாக்கண்டனாக நீடிக்கும் இழுபறி!
,தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் நீடிப்பதா அல்லது மாற்று முடிவை எடுப்பதா என்ற குழப்பம் நீடிப்பதால், திமுக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
