திருச்சி, ஏப்.01; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று (ஏப்ரல் 1, புதன்) காலை மேற்கொண்ட எளிமையான தேர்தல் பரப்புரை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தல் களம்: கொளத்தூர் முதல் திருச்சி வரை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்த அவர், திருவாரூரில் தனது பரப்புரையை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு (மார்ச் 31, செவ்வாய்) திருச்சி வருகை தந்து தங்கியிருந்தார்.
நடைபயிற்சியின் போது வாக்கு சேகரிப்பு
இன்று (ஏப்ரல் 1, 2026) காலை திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர், திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
காந்தி மார்க்கெட்டில் மக்கள் வரவேற்பு
தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிக்குச் சென்ற முதலமைச்சர், அங்குள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சருடன் ஆர்வத்துடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின்
அப்போது சாலையோரத் தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். முதலமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறை அங்கிருந்த வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நடைபயிற்சி சென்றபடி பரப்புரை; மக்களை கவரும் அணுகுமுறை
தேர்தல் நெருங்கும் வேளையில், மேடைப் பேச்சுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், நேரடியாக மக்களிடம் இறங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் இந்த ‘நடைபயிற்சி பிரசாரம்’ திருச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
