Skip to content

திருத்தணியில் சிறார்களால் தாக்கப்பட்டவர் சொந்த ஊர் திரும்பினார்; தவறான தகவல்களை பரப்பாதீர்; வடக்கு மண்டல ஐ.ஜி!

திருத்தணியில் சிறார்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஒடிஷாவைச் சேர்ந்த சூரஜ் சொந்த ஊருக்குப் புறப்ட்டுச் சென்றுவிட்டதாக, வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

திருத்தணி நோக்கிச் சென்ற ரயிலில் அரிவாளுடன் ரீல்ஸ் எடுத்த சிறார்களை கண்டித்ததற்காக சூரஜ் என்ற இளைஞர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கிய சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த வடமாநில இளைஞர் ஊர் திரும்பினார்

தாக்குதலில் படுகாயமடைந்த சூரஜ், உள்ளூரில் சிகிச்சைப் பெற்று, பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, வடமாநில இளைஞர் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் தொடர்பான வீடியோ வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு பெருகி வருவதாக குற்றஞ்சாட்டினர்.

தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

புத்தகங்களை ஏந்த வேண்டிய மாணவர்களின் கைகள் போதைப்பொருளையும் ஆயுதங்களையும் வைத்திருப்பதாக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த வடமாநில இளைஞர் சூரஜ் உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி அஸ்ரா கார்க், சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு சிறார்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கைதான சிறுவர்களில் 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில்…

கைதான நால்வரில் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர், ஒரு சிறுவன் நீதிக்குழு அறிவுறுத்தலின்படி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் அஸ்ரா கார்க் கூறினார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சூரஜ், தனது சொந்த ஊருக்கே செல்ல வேண்டும் என மருத்துவர்களிடம் கூறியதால், அவரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு நேற்றிரவு (30.12.2025) மருத்துவர்கள் அவரை அனுப்பி வைத்துவிட்டதாகவும் ஐ.ஜி தெரிவித்தார்.

வடமாநிலத்தவர் என்பதால் தாக்கவில்லை, முறைத்துப் பார்த்ததால்…

வடமாநிலத்தவர் என்பதால் சூரஜ் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறுவது தவறானது – அவர் முறைத்துப் பார்த்ததால்தான் தாக்கியுள்ளனர் என்றும் கார்க் தெளிவுபடுத்தினார்.

சூரஜ் புலம்பெயர் தொழிலாளி அல்ல எனக்குறிப்பிட்ட அஸ்ரா கார்க், அவர் சுற்றிப்பார்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தவர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *