மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயிலும், அறுபடை வீடுகளில் முதலாவதான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும்தான். தற்போது திருப்பரங்குன்றம் மலைப்பகுதியின் உச்சியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மலைமேல் உள்ள பகுதிகளுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலை ஏறுவதற்கான புதிய கட்டுப்பாடுகள்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் நேற்று (21.12.2025) சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இது தொடர்பாக பக்தர்கள், உள்ளூர் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
அதேவேளையில், மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பு அறிவித்திருந்தது.
19 நாட்களுக்குப் பின்னர் பக்தர்களுக்கு அனுமதி
இதன் தொடர்ச்சியாக, 19 நாட்கள் தடைக்குப்பின் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செுல்ல மாவட்ட நிர்வாகம் இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் வனத்துறை விதிமுறைகளின்படி, இப்போது மலை ஏறும் பக்தர்களுக்குச் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மலைக்குச் செல்பவர்கள் பின்வரும் நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்:
அடையாள அட்டை: மலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தங்களின் ஆதார் அட்டை அசல் அல்லது நகலை வைத்திருக்க வேண்டும்.
தொடர்பு எண்: நுழைவு வாயிலில் தங்களின் கைபேசி எண்ணை பதிவு செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
நேரக் கட்டுப்பாடு: பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே மலை ஏறவும், கீழே இறங்கவும் அனுமதிக்கப்படுவர்.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அனுமதி; பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பரங்குன்றம் மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், நாம் இயற்கையையும் நமது ஆன்மீகத் தலங்களையும் ஒருசேரப் பாதுகாக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் அட்டையை மறக்காமல் எடுததுச் சென்று முருகப் பெருமானின் அருளைப் பெறுங்கள்.
