மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கில், கோவில் நிர்வாகம் முன்வைத்த வாதங்கள் முக்கியமான ஒரு வரலாற்று விவாதத்தை எழுப்பியுள்ளது. மலை உச்சியில் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் தூண் தீபத்தூண் அல்ல, அது சமணர் காலத்துத் தூண் என்றும், வேறு சில தரப்புகள் அது நில அளவைக்கல் என்றும் வாதிடுகின்றன.
இதுதொடர்பான வழக்கில், கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதத்தில், மலை உச்சியில் உள்ள இந்தத் தூண் சமணர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட தூண் ஆகும். இது சமண முனிவர்கள் இரவில் கூடி, கலந்தாலோசனை செய்வதற்காக வெளிச்சம் அளிக்கும் விதமாக விளக்கு ஏற்றப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சமணர்களின் அடையாளம்?
வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய ‘சமணமும் தமிழும்’ போன்ற நூல்களில், மதுரையைச் சுற்றியுள்ள சமணர் மலை, பசுமலை, நாகமலை போன்ற பல மலைகளின் உச்சியில் இது போன்ற தூண்கள் இருப்பதையும், அவை சமணர்களின் அடையாளமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றத்தில் ஆகம விதிப்படி, மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதுவே பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் நடைமுறை என்றும், சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவது ஆகமப்படி சரியல்ல என்றும் கோவில் தரப்பு வாதிட்டது.
அரசு மற்றும் மற்ற தரப்பினரின் வாதங்கள்
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சில தரப்புகள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில், மாநில தொல்லியல் துறையின் கள ஆய்வு மற்றும் 1920-ஆம் ஆண்டு ஆவணங்களின்படி, மலை உச்சியில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல; அது ‘நில அளவைக்கல்’ என்பது உறுதியாகியுள்ளதாக ஒய்வுபெற்ற வட்டாட்சியர் ஒருவரும் இது நில அளவைக்கல்லே என்று தெரிவித்திருப்பது மேற்கோள் காட்டப்பட்டது.
மத நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலை
சர்ச்சைக்குரிய தூண் அமைந்துள்ள இடத்தின் மிக அருகில் சிக்கந்தர் தர்கா உள்ளது-அங்கு தீபம் ஏற்றினால் ஏற்படும் அதீத வெப்பம் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கக்கூடும் என்றும், பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் தலையாய பணி என்றும் அரசு தரப்பு கவலை தெரிவித்தது.
இந்த விவாதங்களின் போது, சமணர்கள் பழமையானவர்கள் என்றும், சில புத்தகங்களில் அந்தத் தூண் விளக்கு ஏற்றும் தூண் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே என்றும் நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
