Skip to content

திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்!


திருவண்ணாமலை, டிச.27;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இன்று (27.12.2025)திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி ஆய்வுகளை மேற்கொள்கிறார். மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நேரில் கண்டறியும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று (டிச.27) மற்றும் நாளை (டிச.28) ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

ரூ.2,095 கோடி மதிப்பிலான 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல்

இந்த வேளாண் கண்காட்சியை இன்று (27.12.2025) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திறந்து வைக்கிறார். இதையொட்டி அங்கு பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து லப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.2,095 கோடியே 7 லட்சம் மதிப்பிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, முடிவுற்ற 314 பணிகளை தொடங்கி வைத்தும் பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார்.

புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

பின்னர் அவர் அரசு போக்குவரத்து கழகத்தின் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கலசபாக்கம், வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைகளை நேரில் சென்று திறந்து வைக்கிறார்.

அதன்பின் செய்யாறில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார். முதல்- அமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *