திருவள்ளூர்,ஜன.19; திருவள்ளூர் அருகே சாலைத் தகராறில் இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக பைக் ஓட்டியதைக் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்து எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் ஓண்டிக்குப்பத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), சுகுமார் (31) மற்றும் அவர்களது நண்பர் கேசவமூர்த்தி (23) ஆகியோர் ஆந்திராவின் கைலாச கோணா நீர்வீழ்ச்சிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் (16.01.2026) இரவு 7 மணியளவில் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேக்கரி அருகே அவர்கள் நின்றிருந்தபோது, இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் கடந்து சென்றுள்ளனர்.
இதனைப் பார்த்த பார்த்திபனும் அவரது நண்பர்களும், “ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள்?” என்று கண்டித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து சென்ற அந்த நபர்கள், பின்னர் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிவாங்கத் திட்டமிட்டனர்.
திட்டமிட்ட தாக்குதல்
இரவு 10 மணியளவில், பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்கள் மணவாளநகரில் உள்ள ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. போதைப்பொருள் மற்றும் மது போதையில் இருந்த அக்கும்பல், மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியதுடன், கற்களைக் கொண்டும் எறிந்தனர்.
ஒருவர் நிகழ்விடத்தில் உயிரிழப்பு; மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
இந்தக் கொடூரத் தாக்குதலில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இவர் ஒரு தனியார் வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். சுகுமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் கடன் வசூல் முகவராகப் பணியாற்றி வந்தார்.
படுகாயமடைந்த கேசவமூர்த்தி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
அரசியல் கட்சி நிர்வாகிகள் கைது
இந்த இரட்டைக்கொலை தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், தலைமறைவாக இருந்த 4 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் நீலகண்டன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஆவார். மற்றொரு நபரான ஜவஹர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி எனத் தெரியவந்துள்ளது.
போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்றபோது நீலகண்டன் மற்றும் ஜவஹர் ஆகியோருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2 பேர் கொலை; அதிர்ச்சியில் திருவள்ளூர் மக்கள்
சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஓட்டியதைத் தட்டிக்கேட்ட இளைஞர்கள், இப்படித் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிவேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்டதற்கு பரிசு படுகொலையா? என திருவள்ளூர் மக்கள் கொந்தளிக்கின்றனர். சகிப்புத்தன்மையற்ற போக்கு மனித உயிர்களுக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாகும்.