Skip to content

திரையில் எம்ஜிஆருக்கு நிகரான வெற்றிகளைப் பெற்றவர் சிவாஜி ! ஆனால், அரசியலில் அத்தகைய வெற்றி வாய்க்காதது ஏன்?

‘சக்ஸஸ்’ என்ற வார்த்தைக்கும் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதற்கு காரணம் என்னவென்பதை இந்தக் கட்டுரையின் கடைசியில் காணலாம்.

தமிழ்த் திரையுலகிலிருந்து அரசியலில் அடியெடுத்து வைத்தவர்களில் ஒரு சிலரே வெற்றிக்கொடி நாட்டினர். சினிமாவில் எம்ஜிஆரின் சமகாலத்தில் அவருக்கு இணையாக வெற்றிகளை குவித்தவர் சிவாஜி.

ஆனால், அரசியலில் எம்ஜிஆருக்கு வாய்த்தது போன்ற வெற்றி சிவாஜிக்கு கிட்டவில்லை. காரணம் என்ன? சற்றே திரும்பிப் பார்க்கலாம்.

நடிகர் திலகத்தின் தொடக்க காலமும் திராவிட இயக்கம்தான்!

நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்புலகச் சக்கரவர்த்தி என பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் சிவாஜி கணேசன். நாடக உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த அவரது தொடக்ககால அடையாளமாக இருந்தது திராவிட இயக்கம்தான்.

நாடக மேடைகளுக்கு அடுத்தபடியாக, அவரைத்  திராவிடர் கழகப் பரப்புரை மேடைகளில்தான் அதிகம் காண முடிந்தது.

எம்ஜிஆர் மறுத்ததால், ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் கணேசன்

அந்தக் காலக்கட்டத்தில் பேரறிஞர் அண்ணா  ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தை எழுதினார். அதில் எம்ஜிஆரை நடிக்க வைக்கலாம் என எண்ணியபோது அவர் மறுத்துவிடவே, அந்த இடத்திற்கு வந்தார் சிவாஜி.

“திராவிட நாடு போரில் ஈடுபடுவேன்” என முழங்கியவர் சிவாஜி கணேசன்

திராவிட நாடு கோரிக்கையை திமுக தீவிரமாக வலியுறுத்திக் கொண்டிருந்த காலம். அப்போது திருச்சி லால்குடியில் ஈ.வி.கே சம்பத் பேசிய பேச்சைக் கேட்டு மிகுந்த உணர்ச்சிவயப்பட்டார்  சிவாஜி.”அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு திராவிட நாடு போரில் ஈடுபடுவேன்” என்று முழங்கினார் சிவாஜி.

ஆனால், நான் திராவிடர் கழகத்திலோ, திராவிட முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை என்று அடிக்கடி கூறுவார் சிவாஜி. 1957ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைப் புயல் தாக்கியபோது, அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்ஜிஆரும், சிவாஜியும் நிவாரண நிதி திரட்டினர்.

அதிக நிதி திரட்டியது சிவாஜி…ஆனால், பரிசு கிடைத்தது எம்ஜிஆருக்கு…!

அதிக நிதியை சிவாஜி திரட்டித்தந்த போதிலும், அண்ணாவிடம் பரிசும் பாராட்டும் கிடைத்தது எம்ஜிஆருக்கு தான். அண்ணாவைச் சுற்றியிருப்பவர்கள் தான்  இதற்குக் காரணம் என சந்தேகம் எழுந்ததால் சோர்வடைந்தார் சிவாஜி.

இதனை அறிந்த பிரபல இயக்குநர் பீம்சிங், மன நிம்மதிக்காக சிவாஜியை திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

திருப்பதி கோவிலுக்குச் சென்றதால் சிவாஜியை விமர்சித்து சுவரொட்டிகள்

மறுநாள் நாளேடுகளில், ‘நாத்திக கணேசன் ஆத்திக கணேசன் ஆனார்’ என்று வந்த செய்திகளைப் பார்த்து அதிர்ந்து போனார் சிவாஜி. “திருப்பதி கணேசனுக்கு கோவிந்தா ” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சிவாஜியின் படச் சுவரொட்டிகள் மீது சாணி அடிக்கப்பட்டது.

கோவிலுக்குச் சென்று வந்தது அரசியல் விவகாரமாகிறது என்பதை உணர்ந்த சிவாஜி, இனி அமைதி காக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

எங்கிருந்தாலும் வாழ்க …” என சிவாஜியை வாழ்த்திய அண்ணா

சிவாஜி காங்கிரஸில் இணைந்தது அண்ணாவுக்கு வருத்தம் என்றாலும், “எங்கிருந்தாலும் வாழ்க” எனக்கூறிவிட்டார். பின்னர் தேர்தல் பரப்புரைகளில் காங்கிரசின் நட்சத்திரப் பேச்சாளராக ஜொலித்தார் சிவாஜி. 1967 தேர்தலில் காங்கிரஸும் காமராஜரும் தோற்று, திமுக ஆட்சியைப் பிடித்தபோதிலும் சிவாஜி தடம் புரளவில்லை.

அப்போது இந்திரா காங்கிரஸ் மற்றும் காமராஜர் தலைமையில் செயல்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைக்க முழு முனைப்புடன் செயல்பட்டார் சிவாஜி. காமராஜரின் மறைவுக்குப் பின்னர் இந்திரா காங்கிரசில் இணைந்த சிவாஜிக்கு உரிய கௌரவம் கிடைத்தது.

சிவாஜியை மாநிலங்களவை எம்பி ஆக்கி அழகு பார்த்தவர் இந்திரா காந்தி!

அப்போது திரை நட்சத்திரம் வர்கீஸ் காலமானதால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சிவாஜிக்கு கொடுத்து அழகு பார்த்தார் இந்திரா காந்தி.

சிவாஜிக்கு தேசிய அளவில் பல தலைவர்களுடன் நட்பு இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் மூப்பனார் கோஷ்டியுடன் எப்போதும் மோதல் தான். 

காங்கிரஸின் கூட்டங்களில் கூட இரு அணிகளுக்கும் தனித்தனியே நாற்காலிகள் போடப்படுவதுண்டு.

ராஜீவ் ஜெயலலிதாவை ஆதரித்ததால் காங்கிரசிலிருந்து விலகினார் சிவாஜி

எம்ஜிஆர்  இறந்து, அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது காங்கிரஸ் கட்சி வி.என். ஜானகி அணியை ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார் சிவாஜி கணேசன்.

ஆனால், ஜெயலலிதா அணியை ஆதரிப்பதென அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் முடிவெடுத்ததால் அவருடன் சிவாஜிக்கு மனக்கசப்பு உண்டானது.

இதன் காரணமாக சிவாஜி ஆதரவு எம்எல்ஏக்களான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பதவி விலகினர். அதன் தொடர்ச்சியாக 1988ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார் சிவாஜி.

தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன் தனிமரமானார்

1989 தேர்தலில் அதிமுகவின் ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவாஜி கட்சிக்கு 50 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டன. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் திலகம், திமுக வேட்பாளர் சந்திரசேகரனிடம் தோற்றுப்போனார்.

முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிக்கு மக்கள் கொடுத்த பரிசு தோல்விதான். இதனால் விரக்தியடைந்த அவர், கட்சியைக் கலைத்துவிட்டு, அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

போதும் அரசியல் என விலகியிருந்த சிவாஜியை மீண்டும் களத்திற்கு அழைத்தார் வி.பி.சிங். அப்போது ராஜீவ் காந்திக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை உருவாக்கியிருந்தார் வி.பி.சிங்.

அதில் தனது ஜனதா தளம் கட்சியின் தமிழ்நாடு தலைவராக செயல்படுமாறு சிவாஜியை கேட்டுக் கொண்டார், சிங். ஆனால், தனது கடந்தகால அரசியல் அனுபவங்களை காரணமாகக் காட்டி மறுத்தார் சிவாஜி.

ஆனாலும், சிவாஜியின் நண்பரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மூலமாக தான் நினைத்ததை சாதித்து, சிவாஜியை தமிழ்நாடு ஜனதா தளத்தின் தலைவராக்கினார் விபி..சிங்.

அடுத்தடுத்த தோல்விகளால் அரசியலுக்கு முழுக்குப் போட்டார் சிவாஜி

பின்னர் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஜனதா தளம் இடம்பெற்றது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையாததால், அரசியலுக்கு முழுக்குப் போட்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

பராசக்தி படத்தில் சிவாஜி முதலில் பேசிய வசனம் ‘சக்ஸஸ்’ என்ற வார்த்தை. ஆனால், சிவாஜியால் அந்த வார்த்தையை கடைசிவரை அரசியல் களத்தில் உச்சரிக்கவே முடியாமல் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *