அங்காரா, டிச.24; துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே லிபிய ராணுவ தளபதி மற்றும் அதிகாரிகள் பயணித்த தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்காராவில் நிகழ்ந்த விமான விபத்து
லிபியாவின் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அகமது அல்-ஹதாத் (Gen. Muhammad Ali Ahmad al-Haddad) மற்றும் நான்கு உயர் அதிகாரிகள் துருக்கியில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு லிபியா திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த ‘பால்கன் 50’ (Falcon 50) ரக தனியார் விமானம், அங்காராவின் எசன்போகா (Esenboğa) விமான நிலையத்திலிருந்து இரவு 8:30 மணியளவில் புறப்பட்டது.
புறப்பட்ட 40 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகவும், அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரியும் விமானி தகவல் அனுப்பியதாக துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.
ஹய்மானா பகுதியில் விழுந்து நொறுங்கியது
அங்காராவிலிருந்து தெற்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹய்மானா (Haymana) என்ற கிராமப்புற பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. அப்பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, விமானம் முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
ராணுவத் தளபதி பலி; லிபியா பிரதமர் இரங்கல்
இந்த விபத்தில் ஜெனரல் அல்-ஹதாத் உட்பட 5 பேரும் உயிரிழந்ததை லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் த்பீபா (Abdul-Hamid Dbeibah) உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “இந்த விபத்து லிபியாவிற்கு ஒரு பெரிய இழப்பு” என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் அல்-ஹதாத் லிபியாவின் ராணுவத்தை ஒன்றிணைக்கும் ஐநா முன்னெடுப்புகளில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பக் கோளாறால் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்
இந்த விபத்துக்கான முதற்கட்ட காரணம் ‘தொழில்நுட்பக் கோளாறு’ என்று கூறப்படுகிறது. துருக்கிய நீதி அமைச்சகம் விபத்து குறித்து விசாரணை நடத்த நான்கு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. லிபியாவிலிருந்து ஒரு விசாரணைக் குழுவும் துருக்கிக்கு விரைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
