இந்திய கிரிக்கெட் அணி, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்திருப்பது, முன்னாள் வீரர்களின் மத்தியில் மட்டுமல்ல, ரசிகர்களிடையேயும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியிருப்பது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. இந்த வரலாற்றுத் தோல்விக்கு, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் சர்ச்சைக்குரிய முடிவுகளே முக்கியக் காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கம்பீரின் குழப்பமான அணுகுமுறையே வீழ்ச்சிக்கு வழியா?
தென்னாப்பிரிக்காவுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்ததுடன், இரண்டாவது டெஸ்டில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் (408) வித்தியாசத்தில் தோற்றது, அணியின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. தென்னாப்பிரிக்க வீரர்கள் 700 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், இந்தியாவால் 341 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது சொந்த மண்ணில் நாம் ஆடுகிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இலங்கையில் ஒருநாள் தொடர் தோல்வி, நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோல்வி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் தோல்வி என இந்தியாவின் டெஸ்ட் பயணம் சறுக்கலையே சந்தித்துள்ளது. இந்தத் தொடர் தோல்விகளுக்குப் பின்னால், கம்பீரின் அணுகுமுறையில் இருக்கும் முரண்பாடுகள் தெளிவாகின்றன.
வார்த்தைகள் மீறிய வாதங்கள்: நிலைப்பாட்டில் மாற்றம் ஏன்?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர்கள் ஓய்வுபெற்ற நிலையில், இது மாற்றத்திற்கான (Transition) நேரமா என்ற கேள்விக்கு, கம்பீர் அளித்த பதில் கவனிக்கத்தக்கது. “என்னை பொறுத்தவரை அணியின் மாற்றத்திற்கான நேரத்தில் நம்பிக்கை இல்லை. இது இந்திய அணி. அவர்களுக்கு அனுபவம் மட்டுமே குறைவாக உள்ளது,” என்று அன்று கம்பீர் பேசியிருந்தார்.
ஆனால், இரண்டாவது முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, அவரது குரலில் மாற்றம் தென்படுகிறது. “இது அணிக்கான மாற்றத்திற்கான நேரம். அனுபவமற்ற இளம் வீரர்கள் தவறுகளில் இருந்துதான் கற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும்,” என்று அவர் பேசியிருப்பது, முந்தைய நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. ஒரு வரலாற்றுத் தோல்விக்குப் பிறகு, தனது முடிவுகளுக்கான பொறுப்பை ஏற்காமல், அனுபவமின்மை என்ற வார்த்தைக்குள் அடைக்க முயற்சிப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
உறுதியற்ற வீரர் தேர்வும், நிலையற்ற வாய்ப்புகளும்
இந்தத் தோல்விக்கு கம்பீர் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்துகின்றனர். அணியில் அவர் செய்த தொடர் மாற்றங்கள், எந்த வீரர் எந்த இடத்தில் விளையாடப் போகிறார் என்ற தெளிவின்மை, ஒரு போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர் அடுத்த போட்டியில் நீக்கப்படுவது போன்ற குழப்பமான காரணிகளே பின்னடைவுக்கு வழி வகுத்தன.
- முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல், அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனில் இல்லை.
- வாஷிங்டன் சுந்தர் ஒரு போட்டியில் நம்பர் 3 இடத்திலும், அடுத்த போட்டியில் நம்பர் 8 இடத்திலும் களமிறக்கப்பட்டார்.
- சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடியபோதும் நிலையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- ஆஸ்திரேலிய டெஸ்டில் ஜொலித்த நிதிஷ்குமார் ரெட்டிக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே களமிறக்கப்படுகிறார்.
- முழு அணியும் சொதப்பியபோது, கருண் நாயர் மட்டும் தண்டிக்கப்பட்டார்.
- சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற திறமையான வீரர்களுக்கு எந்தவித காரணமும் இன்றி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
குழப்பத்தில் வீரர்கள்: பயிற்சி அணுகுமுறையில் சிக்கலா?
இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற உச்ச நட்சத்திரங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இருப்பினும், கே.எல். ராகுல், ஜடேஜா, பும்ரா, சிராஜ், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் அணியில் இருக்கும்போது, கம்பீர் தொடர்ந்து ‘இளம் வீரர்கள் கொண்ட அணி’ என்று பேசுவது கேலிக்குரியதாக பார்க்கப்படுகிறது.
ஒரு வீரரை, “நாம் அடுத்த போட்டியில் அணியில் இருப்போமா, இருக்க மாட்டோமா?” என்ற குழப்பத்தில் தள்ளிவிட்டு, அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது. மேலும், வீரர்கள் எந்த இடத்தில் விளையாடப் போகிறோம் என்ற புரிதல் இல்லாமலேயே இருக்கும்போது, அவர்கள் தங்களுக்குரிய பொறுப்பினை எப்படி உணர்ந்து விளையாட முடியும்?
முடிவுக்குச் செல்லும் டெஸ்ட் பயணம்
ஒருநாள் (ஒயிட்பால்) கிரிக்கெட்டில் கம்பீரின் முடிவுகள் சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வெல்லக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கும் “பெருமை” கம்பீருக்கே சேரும் என்றால் அது மிகையல்ல. வீரர் தேர்வில் உள்ள தொடர் குழப்பம், கேப்டன் இல்லாத நிலையில் பயிற்சியாளரின் குழப்பமான செயல்பாடுகள் ஆகியவற்றால் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளதைக் காண முடிகிறது.
இந்தத் தோல்விக்கு கம்பீர் பொறுப்பேற்க வேண்டிய சூழலில், இனிவரும் டெஸ்ட் தொடர்களில் அணி கட்டமைப்பில் அவர் என்ன மாதிரியான உறுதியான முடிவுகளை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே இந்திய அணியின் எதிர்காலம் அமையும்.
