தூத்துக்குடி,மார்ச்.01; தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் மிக முக்கியமான திருப்பமாக, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு மாறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநில அரசியலில் கனிமொழியின் புதிய இன்னிங்ஸ்?
கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும், 2019 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாகவும் கனிமொழி இருந்து வருகிறார். டெல்லி அரசியலில் தி.மு.க-வின் முகமாக விளங்கி வரும் அவர், தற்போது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
திருச்செந்தூர் தொகுதி ஏன்?
தற்போது திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 6 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ள நிலையில், அந்த இடத்தை கனிமொழி நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் திருச்செந்தூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற வைக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு” என்று குறிப்பிட்டது இந்தக் கருத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
கனிமொழியின் பதில் என்ன?
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு கனிமொழி எம்.பி இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டபோது, “பதில் சொல்ல விரும்பவில்லை” என்று மட்டும் கூறி மர்மத்தை நீடிக்கச் செய்துள்ளார். இருப்பினும், தி.மு.க நிர்வாகிகள் ஏற்கனவே அவர் பெயரில் விருப்ப மனுத் தாக்கல் செய்திருப்பது அவர் களம் இறங்குவது உறுதி என்பதை உணர்த்துகிறது.
அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு
தென் மாவட்டங்களில் தி.மு.க-வின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த கனிமொழியின் வருகை உதவும் என கட்சித் தலைமை கருதுகிறது. அவர் திருச்செந்தூரில் போட்டியிட்டு வெற்றிபெறும் பட்சத்தில், தி.மு.க மீண்டும் ஆட்சி அமைத்தால் அவருக்கு மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசியலில் தனி இடத்தைப் பிடிப்பாரா? தொண்டர்கள் ஆர்வம்
தேசிய அரசியலில் ஆளுமை செலுத்திய கனிமொழி, மாநில அரசியலுக்கு வருவது திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள அவர், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாகச் செயலாற்றப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
