Skip to content

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையுமா? தனிப்பட்ட கருத்து எதனையும் கூற முடியாது: நயினார் நாகேந்திரன்!

சென்னை,மார்ச்.14; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநிலத்தில் தேர்தல் ஜூரம் தொற்றிக் கொண்டிருக்கிறது.

நான்கு முனைப்போட்டி நிலவக்கூடும் எனக் கருதப்படும் சூழலில், அதனை மும்முனைப் போட்டியாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதாவது, அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணையவிருப்பதாக தகவல் பரவியிருப்பதுதான் அதற்கு முக்கியக் காரணமாகும்.

தே.ஜ.கூட்டணிக்கு விஜய் வருவாரா எனத் தெரியாது: நாகேந்திரன்

இதுபோன்ற சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலம் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது; கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விஜய் டெல்லி செல்கிறார்; அதை கூட்டணியுடன் இணைத்துப் பேசுவது சரியாக இருக்காது” என்று பதிலளித்தார்.

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனக் கருத்து

வரவிருக்கும் தேர்தலில் திமுக தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என தமிழக மக்கள் எண்ணுகிறார்கள்; முதலமைச்சர் ஸ்டாலின் இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் எனக் கூறியிருந்தார்; ஆனால் நான், இது குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல் எனக் கூறி இருந்தேன் என்று நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை; டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது; போதைப் பொருட்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது; 2 வயது குழந்தையை கூட விட்டு வைக்காமல் வன்கொடுமை செய்கிறார்கள் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

தூத்துக்குடி பாலியல் சம்பவம் போன்று தினந்தோறும் அவலங்கள்

தூத்துக்குடியில் பிளஸ் டூ மாணவியை அரக்கர்கள் ஒன்று சேர்ந்து வன்கொடுமை செய்து, கொலை செய்தனர். இது என்றைக்கோ ஒரு நாள் நடக்கக்கூடிய செய்தி அல்ல; தினம் தினம் இது மாதிரியான அவலங்கள் நடைபெறுகின்றன. கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது; நான் எனது தனிப்பட்ட கருத்தை கூற முடியாது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விஜய் டெல்லி செல்கிறார்; அவர் டெல்லி செல்வது இது முதல்முறையல்ல எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *