சென்னை,டிச.28; நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 2ஆவது நினைவுதினம் இன்று (28.12.2025) குருபூஜையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை கோயம்பேட்டில், தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரையுலகைச் சார்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி
விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கேப்டன்’ விஜயகாந்த் நினைவுநாள்; ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் – தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ்தளத்தில் புகழஞ்சலி
விஜயகாந்தின் நினைவுதினத்தை ஒட்டி, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தனது எக்ஸ் தளத்தில் இட்டிருக்கும் பதிவில், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி, துணிச்சல் மிக்க ஆற்றலாலும், கனிவான நற்குணத்தாலும் அனைவரின் நன்மதிப்பினைப் பெற்றவர்; அவரது நினைவு நாளில் அவர் ஆற்றிய மக்கள் தொண்டினை நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
நினைவிடத்தில் சீமான் அஞ்சலி; விஜயகாந்துக்கு புகழஞ்சலி
விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“ஒரு நல்ல நடிகனாக இருந்தாரா? ஒரு நல்ல தலைவனாக இருந்தாரா? என்பதைக் கடந்து ஒரு நல்ல மனிதராக இருந்தாரா என்பதுதான் முக்கியம்; யாராலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு வாழ்ந்தவர் விஜயயாத்திரை” என்று தெரிவித்தார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் அஞ்சலி
ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவன் மறைவுக்குப் பின் மக்கள் மனதில் வாழ்வதைப் பொறுத்துதான் மதிப்பிட முடியும்; எந்த பெரிய அதிகாரத்தில் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகளைப் படிக்க வைத்தார்; அவரால் IAS, IPS ஆன அதிகாரிகள் 1000 கணக்கில் இருப்பார்கள்; சமத்துவம், சகோதரத்துவத்தைச் சொல்லளவில் இல்லாமல் செயல்படுத்தியவர் விஜயகாந்த் என்று சீமான் கூறினார்.
இதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி,bமாநில அமைச்சர்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும், திரையுலகினரும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
