குன்னூர்,ஜன.05; நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள போர்த்தி கிராமத்திற்கு அருகாமையில் புலி ஒன்று காலில் காயங்களுடன் தேயிலை தோட்டத்தில் உலாவியதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காலில் காயத்துடன் புலி நடமாடும் வீடியோ; மக்கள் அச்சம்
காலில் காயப்பட்டு நொண்டியபடி தேயிலை தோட்டத்தின் வழியாக நடந்து சென்ற புலியின் வீடியோ தற்போது வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் புலியை டிரோன் கேமரா உதவியுடன் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றொரு புலியுடன் சண்டையிட்டு காயமடைந்திருக்கலாம்
இந்த புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டு இருக்கலாம் எனவும், அந்த சண்டையின் காரணமாக காயமுற்று அந்த காயத்துடன் இந்த பகுதிகளில் உலாவி இருக்கலாம் எனவும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். வனத்துறையினர் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அருகாமையில் குடியிருப்பு கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் ஆகியவை உள்ளதால் அதிகாலை நேரங்களிலும் தேயிலை தோட்டங்களுக்கு பணிகளுக்காகவும் பெண்கள் செல்வதால் புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
வேலைக்குச் செல்ல முடியவில்லை என பெண்கள் கவலை
புலியின் நடமாட்டம் குறித்து போர்த்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியபோது, “காலையில் நாங்கள் வேலைக்கு செல்லும் பொழுது புலி நடமாட்டம் இருப்பதால் இன்று யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் திருப்பி அனுப்பி விட்டனர். நாங்களும் திரும்பி வந்து விட்டோம். காலில் காயங்களுடன் தேயிலை தோட்டத்தில் படுத்திருக்கும் புலி, வாரக்கணக்கில் ஆகிவிட்டால் இங்கேயே தங்கிவிடும். வனத்துறையினர் அதன் காயத்தை சரி செய்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
