டெல்லி,ஜன.29; காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும், அக்கட்சியின் திருவனந்தபுரம் எம்பி சசி தரூருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அண்மைக்காலமாக ஊடங்களில் செய்திகள் வெளியாகின. சசி தரூர் பாரதிய ஜனதாவில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இதன் காரணமாகத்தான், கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த முக்கிய கூட்டத்தில் சசி தரூர் கலந்து கொள்ளவில்லை என்றும் காரணம் கூறப்பட்டது.
டெல்லியில் கார்கே, ராகுலுடன் சசி தரூர் சந்திப்பு!
இதுபோன்ற சூழலில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள சசி தரூர், இன்று (29.01.2026) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் அலுவலகத்திற்குச் சென்று அவரையும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ராகுல்காந்திக்கும் சசி தரூருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
“ஆக்கப்பூர்வமான நேர்மறையான விவாதம் நடத்தினோம்”
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், ‘‘எனது கட்சியின் இரண்டு தலைவர்களான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் நான் ஒரு கலந்துரையாடலை நடத்தினேன். நாங்கள் மிகவும் நல்ல, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். எல்லாம் நன்றாக உள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இணைந்து பயணிக்கிறோம். இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்?’’ என தெரிவித்தார்.
எப்போது பரப்புரை செய்யாமல் இருந்துள்ளேன்?: சசி தரூர்
அப்போது, கேரள சட்டப்பேரவைத் தேர்தலின்போது நீங்கள் காங்கிரஸ் கட்சிக்காக பரப்புரையில் ஈடுபடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘‘நான் எப்போதும் கட்சிக்காக பரப்புரை செய்திருக்கிறேன். நான் எப்போதுதான் பரப்புரை செய்யாமல் இருந்துள்ளேன்?’’ என பதில் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க உள்ளீர்களா?
கேரள தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் களமிறங்க இருக்கின்றீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘‘இல்லை. அது குறித்து விவாதிக்கப்படவில்லை; எந்தப் பதவிக்கும் வேட்பாளராக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை; தற்போது நான் ஒரு எம்பியாக இருக்கிறேன்; திருவனந்தபுரம் தொகுதி மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறேன்; நாடாளுமன்றத்தில் அவர்களின் நலன்களை நான் கவனிக்க வேண்டும்; அதுதான் என் வேலை’’ என்று சசி தரூர் பதிலளித்தார்.
நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம்: சசி தரூர்
இதன் தொடர்ச்சியாக சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இன்று பல்வேறு விஷயங்கள் குறித்து அன்பான, ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை நடத்தியதற்காக மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் ராகுல் காந்திக்கும் நன்றி. இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், சசி தரூரின் பேட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவில் அவர் உறுதியாக இருப்பதையே வெளிப்படுத்தி இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
