Skip to content

நான் அழுத்தங்களுக்கு அடங்கிப் போகும் ஆள் இல்லை: தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் அதிரடி உரை!

மாமல்லபுரம்,ஜன.25; தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று (25.01.2026) சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாகவும் அதிரடியாகவும் உரையாற்றினார்.

மொழிப்போர் மற்றும் கொள்கை தியாகிகளுக்கு விஜய் மரியாதை

கூட்டத்திற்கு வந்தவுடன் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செய்தார். முன்னதாக விஜய் மேடைக்கு வரும்போது, தொண்டர்கள் அவருக்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, மீண்டும் கட்சி நிகழ்வில் விஜய் உரையாற்றிய கூட்டம் இதுவாகும்.

“மக்களுக்குத்தான் அழுத்தம், எனக்கல்ல”

கூட்டத்தில் பேசிய விஜய், “நாம் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில்
இருக்கிறோம். எனக்கு ஏதாவது அரசியல் அழுத்தம் இருக்குமோ என்று பலர் நினைக்கிறார்கள்; நான் அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப்போகும் ஆள் இல்லை; அழுத்தம் என்பது எனக்கு இல்லை, மாற்றி மாற்றி வாக்களித்து ஏமாந்து போயிருக்கும் தமிழக மக்களுக்குத்தான் அந்த அழுத்தம் இருக்கிறது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான உறுதிமொழி

விஜய் தனது உரையில் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். “அரசியலில் ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன், அதைத் தொட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை; ஒரு துளி ஊழல் கூட நம் கட்சியில் படிய விட மாட்டேன்; தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற பயம் இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் விஜய் கடுமையாகச் சாடினார். “திமுக ஒரு தீய சக்தி. அதிமுக தற்போது பாஜகவிடம் நேரடியாகச் சரணடைந்துவிட்டது. 30 ஆண்டுகளாக என்னைச் சினிமாவில் குறைத்து மதிப்பிட்டார்கள், இப்போது அரசியலிலும் அதையே செய்கிறார்கள். ஆனால் மக்கள் என்னைச் சரியாக மதிப்பிட்டுள்ளார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

தொண்டர்களுக்கு வேண்டுகோள்

கட்சியினருக்கு அறிவுரை வழங்கிய விஜய், “யாரோடும் எந்தச் சூழலிலும் நமது அரசியல் கொள்கைகளைச் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அடிமையாக இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை. தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அழுத்தங்களுக்கு் அடங்க மாட்டேன் என்ற முழக்கம் என்ன சொல்கிறது?

விஜய்யின் இந்த ‘அழுத்தங்களுக்கு அடங்க மாட்டேன்’ என்ற முழக்கம், வரும் தேர்தலில் தவெக-வின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சமரசமற்ற அரசியல் என்ற கொள்கையை முன்னிறுத்தி விஜய் களமிறங்கியிருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *