நாகர்கோவில்,ஏப்.11; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பரப்புரை 21ஆம் தேதி மாலையுடன் முடிவடையவிருப்பதால், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது, பொதுக்கூட்டங்கள், வாக்குறுதிகள் பற்றி எடுத்துரைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தலைவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம்
இதன்படி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாள்தோறும் இரண்டு நகரங்களில் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் பங்கேற்று கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தினமும் பல தொகுதிகளில் வாகனத்தில் சென்று பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகின்றார்.
விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் விஜய்
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விசில் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை செய்வதற்காக விஜய் நாளை (ஏப்ரல் 12, ஞாயிறு) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார்.
கன்னியாகுமரியில் விஜய் நாளை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
கன்னியாகுமரி அருகேயுள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு அனுமதிகோரி தவெக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் அனுமதி கோரி மனு அளித்திருந்தனர்.
பல்வேறு கட்டுப்பாடுகள்; 6 மணி நேரத்திற்கு அனுமதி
அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்ட நிலையில், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 6 மணி நேரம் மட்டுமே கூட்டத்தை காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
பொதுக்கூட்டப்பணிகளை ஆய்வு செய்யும் நிர்வாகிகள்
விஜய்யின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் மேடை அமைக்கும் பணிகளை தவெக மாநில நிர்வாகிகள் என்.ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் இன்று (ஏப்ரல் 11, சனிக்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.
அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
