Skip to content

நியூயார்க் விமான நிலையத்தில் பயங்கரம்; ஏர் கனடா விமானம் தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்து-இரு விமானிகளும் பலி

நியூயார்க்,மார்ச்.23; நியூயார்க்கின் பரபரப்பான லா கார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், அங்கு நின்றுகொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானியும் துணை விமானியும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்தது எப்படி?

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் இருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் கனடா எக்ஸ்பிரஸ் (CRJ-900) விமானம், இன்று (மார்ச் 23, திங்கள்கிழமை) அதிகாலை நியூயார்க்கில் தரையிறங்கியது. அப்போது ஓடுதளத்தில் (Runway 4) எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த போர்ட் அத்தாரிட்டி தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் அதிவேகமாக மோதியது.

விமானம் மோதிய வேகத்தில் அதன் முன்பகுதி (Nose section) கடுமையாக சேதமடைந்து சிதைந்தது. விமானம் தரையிறங்கும் போது சுமார் மணிக்கு 39 கி.மீ வேகத்தில் இருந்ததாக ‘பிளைட் ரேடார் 24’ (Flightradar24) தரவுகள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாட்டு அறையின் பதறவைக்கும் ஆடியோ

இந்த விபத்து நடப்பதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் (ATC) இருந்த அதிகாரி, ஓடுதளத்தில் இருந்த வாகனத்தை “நில்! நில்! நில்!” (Stop! Stop! Stop!) என்று பதற்றத்துடன் கத்தும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், அந்த எச்சரிக்கையை மீறி மோதல் நிகழ்ந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.

உயிரிழப்புகள் மற்றும் காயங்கள்

இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தீயணைப்பு வாகனத்தில் இருந்த வீரர்கள் மற்றும் விமானத்தில் இருந்த பயணிகள் உட்பட சுமார் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தைத் தொடர்ந்து லா கார்டியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு வரவேண்டிய அனைத்து விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் (FAA) இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஓடுபாதையில் தரைவழி வாகன நடமாட்டத்தால் விபத்து

விமான நிலையங்களில் தரைவழி வாகனங்களின் நடமாட்டம் மற்றும் விமானங்களின் இயக்கம் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு குறைபாடே இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. இந்த விபத்து சர்வதேச விமான போக்குவரத்து பாதுகாப்பில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் இரங்கல்கள் குவிந்து வரும் நிலையில், முழுமையான விசாரணைக்குப் பின்னரே விபத்தின் உண்மையான காரணம் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *